எதிர்காலத்தில் குழந்தைகளைப் பெறுவது கடினமாகிவிடுமா? மனித இனத்தின் இருப்பே ஆபத்தில் உள்ளதா? ஆம், என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக், உண்ணும் உணவில் உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் மாறிவரும் காலநிலை ஆகியவை நம்மை மெளனமாக அழித்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதே இதற்குச் சான்றாகும். இப்போது அதே அச்சுறுத்தல் மனிதர்களையும் வந்தடைந்துள்ளது.
நமக்குச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஆபத்தான வேதிப்பொருட்கள் உள்ளன. இவை நம் உடலில் உள்ள ஹார்மோன்களை நேரடியாகப் பாதிக்கின்றன. குறிப்பாக, செயற்கை வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் ‘எக்காலத்திலும் அழியாத’ வேதிப்பொருட்கள் (forever chemicals) ஆகியவை இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கின்றன. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதற்கும், பெண்களின் கருத்தரிப்பில் சிக்கல்கள் ஏற்படுவதற்கும் இவையே காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. PFAS மற்றும் ஆர்கனோகுளோரின் (organochlorine) வேதிப்பொருட்கள், பறவைகள் முட்டையிலிருந்து குஞ்சு பொரிப்பதைக் கடினமாக்குகின்றன. மேலும், கடல்களில் அதிகரிக்கும் நுண்-பிளாஸ்டிக் (microplastics) அளவு, மீன்களின் முட்டை உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால் பல உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளன. நாம் இயற்கையைச் சிதைத்தால், பதிலுக்கு இயற்கை நமது இனப்பெருக்கத் திறனைச் சிதைக்கிறது.
காலநிலை மாற்றமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். புவி வெப்பமடைதல் நம் உடலின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆக்சிஜன் அளவு குறைதல் மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவை விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் இனப்பெருக்க தொடர்பான அழுத்தத்தை அதிகரிக்கின்றன. உலகம் முழுவதும் சுமார் 1,40,000 வகையான செயற்கை வேதிப்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் விளைவுகள் வருங்கால சந்ததியினரைப் பாதிக்குமா? என்பது குறித்து விஞ்ஞானிகள் கவலை கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
நாம் இப்போதே விழித்துக்கொள்ளாவிட்டால் நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிடும். பிளாஸ்டிக் பயன்பாட்டை நம்மால் முடிந்தவரை குறைக்க வேண்டும். வேதிப்பொருட்களின் பாதுகாப்பு குறித்துக் கடுமையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். காற்று மற்றும் நீர் மாசுபாட்டைக் குறைப்பதோடு, காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், இனப்பெருக்கத் திறன் சார்ந்த இந்த மெளனமான பிரச்சனை ஒரு பெரும் நெருக்கடியாக மாறி, மனித இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும்.
Read More : இனி OTP இல்லாமலேயே WhatsApp-இல் உள்நுழையலாம்.. அசத்தல் அம்சம் அறிமுகம்..!



