மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே, ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு, ஈரான் இஸ்ரேலியப் பகுதிக்குள் ஏராளமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. ஏப்ரல் 8 அன்று இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும்.
குறைந்தது மூன்று அலைகளாக ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலின் ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.. தெஹ்ரான் ஒரு “பெரும் தவறை” இழைத்துவிட்டதாகக் கூறியுள்ள டெல் அவிவ், தாக்குதல்களுக்கு “கடுமையான” பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.. இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் “பதிலடி கொடுக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்ததற்கும் 20 பேர் காயமடைந்ததற்கும் பதிலடியாகவே ஈரானின் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பதிலடி நடவடிக்கைக்கு அஞ்சி ஈரான் தனது வான்வெளியை மூடியுள்ளது. “இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மீண்டும் நிகழ்த்தப்பட்டால், பதிலடி நடவடிக்கைகள் இன்னும் விரிவானதாக இருக்கும்.. மேலும் இப்பகுதி முழுவதும் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் சியோனிச இலக்குகளையும் அவை உள்ளடக்கியதாக இருக்கும்,” என்று ஈரானின் புரட்சிகரப் படை (Revolutionary Guard) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்திய குடிமக்களுக்கு ஈரானில் உள்ள இந்திய தூதரம் வெளியிட்டுள்ளது.. தூதரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இப்பகுதியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரான் நாட்டிற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் தூதரகம் தனது முந்தைய அறிவுறுத்தலை மீண்டும் வலியுறுத்துகிறது.
தற்போது ஈரானில் உள்ள இந்தியக் குடிமக்கள், கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகள் மூலம் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளது..



