சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்ப்பூரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள எஸ்கலேட்டரில் ஏறும் போது தந்தையின் கையில் இருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலுக்கு ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்று இருக்கிறார். அப்போது ஷாப்பிங் மாலின் மூன்றாவது தளத்தில் உள்ள எஸ்கலேட்டரில் குடும்பத்துடன் ஏற முயன்றுள்ளனர். அந்த நபர் தனது ஒரு வயது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு ஐந்து வயது மகனை எஸ்கலேட்டரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக கையில் இருந்த 1 வயது குழந்தை தவறி 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர், ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வயது குழந்தை எஸ்கலேட்டரில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.