எப்போது தேர்தல் வந்தாலும் தவெக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
சென்னை அறிவாலயத்தில் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ பாஜகவின் ஜெராக்ஸ் போல் முதல்வர் விஜய் செயல்படுகிறார்.. நிதி ஆயோக் கூட்டத்தில் திமுகவின் சாதனைகள், கோரிக்கைகளையே கூறியுள்ளார் முதல்வர் விஜய்.. பாசிசம், பாயாசம் என நக்கல் செய்த முதல்வர் விஜய் டெல்லி போய் என்ன செய்தார்..?
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்கவே மோடியை சந்தித்தேன் என என்னை முதல்வர் விஜய் விமர்சித்திருந்தார்.. கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லி சென்றீர்களா என முதல்வர் விஜய்யிடம் நான் கேட்கட்டுமா.? உங்களை கேள்வி கேட்டு உங்களை போல் தரம் தாழ்ந்த அரசியல் செய்ய நான் விரும்பவில்லை.. ஆட்சி அதிகாரத்தில் யார் இருந்தாலும் திராவிட மாடலின் ப்ளூ பிரிண்டில் தான் செயல்படுவர்..
ஒரே மாதத்தில் கேலி கூத்தான அசிங்கமான ஆட்சியாக தவெக ஆட்சி மாறி உள்ளது.. 6 மாதம் கூட விமர்சனம் செய்யாமல் இருக்கும் மாதிரி இந்த ஆட்சி நடக்குமா..? நான் ஏற்கனவே கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசினேன்.. ஆனால் உண்மைக்கு மாறாக அதை திரித்து ஆட்சியை கவிழ்க்க சதியா என்று நம் எதிர்கள் அழ ஆரம்பிச்சுட்டாங்க..
திமுக பொறுப்பான துடிப்பான எதிர்க்கட்சியாக தனது கடமையை உறுதியாக செய்யும், இந்த ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டுக்காட்டுவோம்.. கேள்விகளை கேட்போம்.. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்..
கடந்த 5 ஆண்டுகாலம் நடைபெற்ற திமுக ஆட்சி மகளிருக்கான ஆட்சியாக இருந்தது.. மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம் என நாம் தான் பல திட்டங்களை உருவாக்கினோம்.. நடந்து முடிந்த தேர்தலின் போது கூட பெண்களுக்காக தான் நிறைய வாக்குறுதிகளை கொடுத்தோம்..
ஆனால் இப்போது என்ன நடக்கிறது.. மின் வெட்டு, தொடர் குற்றங்கள் என நடக்கிறது.. இதனால் ஏன் தான் இந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.. தவெகவுக்கு வாக்களித்தவர்களும் வருத்தப்படுகின்றனர்.. வாக்களிக்காதவர்களும் வருத்தப்படுகின்றனர்.. இந்த ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டது..” என்று கூறினார்..



