அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த AN-32 விமான விபத்தில் ஐந்து விமானப்படை வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.. இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் “ அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் AN-32 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். துணை விமானி உயிர் பிழைத்துள்ளார், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 10 மணியளவில் வழக்கமான பயணத்தின்போது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், முதற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணை முடிவுகள் வரும் வரை மக்கள் யூகங்களைத் தவிர்க்குமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
விபத்துக்கு பிந்தைய சூழலைக் காட்டும் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. விபத்து நடந்த இடத்திலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவதையும், மீட்புக் குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து அவசரக்கால நடவடிக்கைகளைத் தொடங்கியதையும் அந்தக் காட்சிகள் காட்டுகின்றன. விபத்துக்குப் பிறகு விமானம் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன…
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பாக்தோக்ராவில் மார்ச் 7, 2025 அன்று மற்றொரு AN-32 விமானம் அவசர நிலையில் தரையிறங்கிய (crash landing) சம்பவத்திற்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்தச் சம்பவத்தில் விமானக் குழுவினர் அனைவரும் உயிர் பிழைத்தனர் மற்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
AN-32 என்பது சோவியத் காலத்தைச் சேர்ந்த, இரண்டு என்ஜின்கள் கொண்ட டர்போப்ராப் (turboprop) ரக சரக்கு விமானமாகும்; இது 1980-களில் பயன்பாட்டிற்கு வந்தது. சவாலான நிலப்பரப்பு மற்றும் வானிலைச் சூழல்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, வீரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானம் சுமார் 40 முதல் 50 பயணிகள் வரையோ அல்லது 7.5 டன் வரையிலான சரக்கையோ சுமந்து செல்லும் திறன் கொண்டது.
இந்திய விமானப்படை சுமார் 105 AN-32 ரக விமானங்களைக் கொண்ட தொகுப்பை இயக்குகிறது; இவற்றில் பல விமானங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. உக்ரைனைச் சேர்ந்த ‘உக்ர்ஸ்பெட்ஸ்எக்ஸ்போர்ட்’ (Ukrspetsexport) நிறுவனம் சுமார் 35 விமானங்களை மேம்படுத்தியுள்ளது, அதேவேளையில் மீதமுள்ள விமானங்களை மேம்படுத்தும் பணிகள் உள்நாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



