நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான முதல்வர் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார்.. முதல்வர் விஜய்யின் இந்த பதிலுரையை அதிமுக ஐடி விங் காட்டமாக விமர்சித்துள்ளது.. இதுகுறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட அறிக்கையில் “ தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு என்று ஒரு தனி மாண்பு உண்டு. “வரலாற்று சிறப்புமிக்க பேரவை” என்று பெருமையோடு நாம் சொல்லக்கூடிய அவையிலே இக்கூட்டத் தொடரில் நடைபெற்ற சம்பவங்கள் துளியும் மரபைக் காக்கும் வகையில் இல்லை. மேகதாது என்ற ஜீவாதாரப் பிரச்சினையில் மிக அலட்சியமாக, எந்த விவாதமும் இல்லாமல் ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை இந்த பொய்க்கால் குதிரை அரசு நிறைவேற்றியிருப்பது, அவையின் செயல் விதிகளை குழிதோண்டிப் புதைக்கும் செயல்.
மாண்புமிகு அம்மா அவர்களின் முயற்சியால் காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டு, மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் முயற்சியால் அமையப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையம் அமையப்பெற்று,
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையான ஆணையமாக அது செயல்படும் நிலையில், இன்னொரு ஆணையம் என்பது இத்தனை ஆண்டுகால சட்டப் போராட்டத்தின் வெற்றியை நீர்த்துப் போகச் செய்து, கர்நாடக அரசின் சதி வலையில் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தள்ளும் செயலாகும். விவரம் தெரியாமல், விவசாயிகளின் வலிகள் புரியாமல் இன்றைய அரசு இப்படி ஒரு இடைச் செருகல் தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பது வரலாற்றுத் தவறு.
சட்டமன்ற உரைகள் என்பது பதிவில் ஏற்றக் கூடியது, வரலாற்றில் நிற்கக் கூடியது. அங்கே Diplomacy, Decency, Decorum தான் ஓங்கி நிற்க வேண்டும். ஆனால், நேற்றைய எதிர்க்கட்சித் தலைவர் உரை மற்றும் இன்றைய முதல்வரின் பதிலுரையில் Disrespecful Slander தான் முன்னே நின்றது. “சி எம் சார்… இப்போ நீங்க உங்க ஆரஞ்சு கலர் வேன்-ல நின்னு பேசுறதா நினைச்சி, மனப்பாடம் பன்ன ஸ்கிரிப்டை ஒப்பிச்சி, Action பண்ணி காமிங்க” என்று உரையை எழுதிக் கொடுத்தவர் சொல்லிவிட்டார் போல… இன்றைய முதல்வரும் அப்படியே செய்துவிட்டார்.
அதிலும், எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து என்ன விளக்கம் இருந்தது? மின்வெட்டு குறித்து என்ன பதில் இருந்தது? அமோனியா கேஸ் லீக் மரணங்கள் குறித்து என்ன பேசப்பட்டது? ஒன்றுமே இல்லையே..!!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எந்த ஒரு சிறுமிக்காகவும் இன்றைய முதல்வரின் மனம் பதறியதாக தெரியவில்லை. அவ்வளவு ஏன், கரூர் மரணங்களையே மிக எளிதாக கடந்து செல்கிறார். அதிலும், கரூர் மரணம் பற்றி பேசும் போது, தன் மீது பழி போடுவது “வேற லெவல்” என்ற வார்த்தையை சொல்கிறார் என்றால், நாம் எப்போதும் சொல்வோமே, “Narcissistic Behaviour”, அது இது தான்!
மேலும், சட்டப்பேரவையில் உறுப்பினராக அல்லாத ஒரு முன்னாள் முதல்வர் குறித்து, அவரது கட்சியினர் இல்லாத நேரத்தில் பேசுகிறார் என்றால், ஆளுங்கட்சி சபாநாயகர் அனுமதி அளிக்கிறார் என்பதற்காக ஒரு முதல்வர் தன் பொறுப்பின் தன்மை உணராமல் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் சில அமைச்சர்கள் பின்னால் ஒளிந்துகொள்ளும் இன்றைய முதல்வர், பனையூர் பங்களாவில் மனப்பாடம் செய்துவிட்டு வந்து கம்பு சுற்றும் போது மட்டும் யாரும் குறுக்கிடக் கூடாதா? அப்படி குறுக்கிட்டால், மனப்பாடம் செய்த டயலாக்கை மறந்துவிடுவாரா ?
Point of Order என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கூட்டத்திடம் தமிழ்நாடு சட்டமன்றம் மாட்டிக்கொண்டது தான் வேதனையின் உச்சம். இதில் ஒரு சைகை வேறு…
இதற்கு கைதட்ட ஒரு ரசிக வெறிக் கூட்டம்! இது என்ன சட்டமன்றமா? சர்க்கஸ்ஸா?
அரசியலை ஏதோ Entertainment Platform போல கருதிக் கொண்டிருக்கும் ரீல்ஸ் முதல்வரே.. மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது Content அல்ல… Commitment! மக்கள் பிரச்சனை பற்றி இனியாவது பேசுங்கள்!
(பி.கு. : அப்பா எங்க, மனைவி எங்க என்பதெல்லாம் மக்கள் பிரச்சனை அல்ல. மக்களுக்கு எது தேவையோ, அந்த அரசியலை மட்டுமே எந்நாளும் பேசுவோம்.)” என்று தெரிவித்துள்ளது..



