நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாக்யராஜ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. இன்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்..
தனது குரு, பாரதிராஜா காலமான 2 வாரத்திலேயே பாக்யராஜ் காலமான சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் இருந்த பாக்யராஜ் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் விஜய், இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.. இதுகுறித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்க பதிவில் “ தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” என்று தெரிவித்திருந்தார்..
இந்த நிலையில் மறைந்த இயக்குநர், நடிகர் பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பாக்யராஜ் வீட்டுக்கு சென்ற அவரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பாக்யராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனுவை முதல்வர் விஜய் ஆரத்தழுவி ஆறுதல் கூறினார்.



