தமிழக முதலமைச்சரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் தொகுதி மக்களுக்காக பிரத்யேக மொபைல் செயலி விரைவில் அறிமுகமாக உள்ளது.
சென்னை பெரம்பூர் தொகுதி தமிழக முதல்வர் விஜய்யின் சொந்த தொகுதியாகும்.இந்த தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் பொதுமக்களின் கோரிக்கைகள், குறைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளை நேரடியாக பதிவு செய்து, அவற்றின் நிலையை கண்காணிக்கும் வகையில் மக்களுக்காக பிரத்யேக மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் தனி செயலி விரைவில் வெளியாகவுள்ளது.பெரம்பூர் தொகுதி மக்கள் எவ்வாறு அந்த செயலியை உபயோகிப்பது என்பது குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது
இந்த செயலி மூலம் குடிநீர் பிரச்சனை, சாலை சேதம், தெருவிளக்கு பழுது, குப்பை அகற்றுதல், கல்வி மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் எளிதாக பதிவு செய்ய முடியும். புகார் பதிவு செய்யப்பட்டவுடன் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக அனுப்பப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.பயனர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து, வார்டை தேர்வு செய்து புகாரை சமர்ப்பிக்கலாம். தட்டச்சு செய்ய சிரமம் இருப்பவர்கள் குரல் பதிவு வசதியையும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு புகாருக்கும்வாட்ஸ் அப் மூலம் தனித்துவமான சேவை எண் வழங்கப்படும். அந்த எண்ணின் மூலம் புகாரின் தற்போதைய நிலை, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்வு வழங்கப்படும் காலக்கெடு உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மேலும், வார்டு வாரியாக பதிவாகும் புகார்கள் மற்றும் அவற்றின் தீர்வு நிலையும் பொதுமக்கள் பார்வையிடும் வசதி இதில் இடம்பெறுகிறது.
இந்த புதிய முயற்சி குறித்து தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் கோரிக்கைகள் நேரடியாக நிர்வாகத்தை சென்றடையவும், அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்கவும் இந்த செயலி உதவும் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பெரம்பூர் தொகுதிக்கென தனி செயலி அறிமுகப்படுத்தப்படுவது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. முதல்வர் பிரதிநிதித்துவம் செய்யும் தொகுதியில் எழும் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்த நோக்கத்திற்காகவே மக்கள் சேவையை டிஜிட்டல் முறையில் மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த செயலி அறிமுகமான பிறகு, பெரம்பூர் மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையிலான தொடர்பு மேலும் எளிமையாகி, புகார்களுக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Also Read:”குண்டாக இருந்ததால் கொலை செய்தோம்” கணவன் வீட்டில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!



