ஒரு சில ஹீரோயின்கள் திரைக்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. “வாமா மின்னலு” என்ற வசனத்திற்கு ஏற்ப, வந்தவுடன் வந்த வேகத்திலேயே மறைந்து விடுவார்கள். ஆனால் சில ஹீரோயின்கள் குறைந்த படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட, அவர்களின் நினைவுகள் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும். அந்த வகையில், தனது இயல்பான நடிப்பால் பலரின் மனதை கவர்ந்த நடிகை ஒருவரின் புகைப்படம் தான் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
1990களில் தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பிரபலமடைந்து, ரசிகர்களின் கனவுக் கன்னியாக உயர்ந்தவர் தான் நடிகை சங்கவி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும், தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் பகிரும் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நடிகை சங்கவி, தளபதி விஜய் நடித்த ‘ரசிகன்’, ‘விஷ்ணு’, ‘கோயம்புத்தூர் மாப்ளே’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும், அஜித்துடன் ‘அமராவதி’ படத்தில் இணைந்து நடித்தது அவரது ஆரம்ப கால சினிமா பயணத்தில் முக்கியமானதாகும். அந்த படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர், விரைவில் ரசிகர்களின் விருப்பமான 90ஸ் ஹீரோயின்களில் ஒருவராக மாறினார்.
பின்னர் சினிமாவில் இருந்து விலகிய அவர், 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, தற்போது குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி ஒரு குழந்தையின் தாயாக வாழ்ந்து வருகிறா.சினிமாவில் இருந்து விலகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொதுவெளியில் அதிகம் தோன்றாமல் இருந்த நடிகை சங்கவி, தற்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் படங்கள் இன்ஸ்டாகிராமில் அதிக கவனம் பெற்றுள்ளன.
அந்த புகைப்படங்களில், நுணுக்கமான வடிவமைப்புகள் கொண்ட கருப்பு நிற புடவையில் குடை பிடித்தபடி அவர் எடுத்திருக்கும் ஸ்டைலிஷ் போஸ் ரசிகர்களை ஈர்த்துள்ளது. புடவைக்கு பொருந்தும் வகையில் வளையல்கள் மற்றும் ஜிமிக்கி அணிந்து அவர் காட்சியளித்திருப்பது அவரது தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த பலரும், “இது நம்ம சங்கவியா?” என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தோற்றத்தில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும், அவரது இயல்பான சிரிப்பும் முக அழகும் இன்னும் மாறவில்லை என்று 90ஸ் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், தற்போது அவர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாளையத்து அம்மன்’ என்ற ஆன்மீக தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read: லாபம் கொட்டணுமா? உடனே இந்தச் செடியை வாங்கி உங்கள் டேபிளில் வையுங்கள்..



