இன்றைய காலத்தில் வயது, வசதி அல்லது சூழ்நிலையை காரணம் காட்டி பலர் முயற்சியை கைவிடுகிறார்கள். ஆனால், வெற்றி என்பது வயதைப் பொறுத்தது அல்ல; மன உறுதியையும் உழைப்பையும் பொறுத்தது என்பதை சிலர் தங்கள் வாழ்க்கையால் நிரூபித்துக் காட்டுகிறார்கள். கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து உழைத்தால் வாழ்க்கையில் உயர முடியும் என்ற மிகப்பெரிய பாடத்தை, 76 வயதிலும் தனது உழைப்பால் வாழ்ந்து வரும் ஒரு பாட்டி அனைவருக்கும் உணர்த்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பச்சளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 76 வயதான செல்லாயி பாட்டி. வயது முதிர்ந்த நிலையிலும், தனது கைவினைத் திறமையை நம்பி இன்றும் பாரம்பரிய பலகாரங்களை தயாரித்து வாழ்க்கையை முன்னெடுத்து வருகிறார். செல்லாயி பாட்டியின் கணவர் விவசாயம் செய்து வந்த நிலையில், குடும்ப வருமானம் மட்டும் போதாமல் இருந்ததால், குடும்பத்திற்கு துணையாக சிறிய அளவில் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் சுண்டல், வடை போன்ற சிற்றுண்டிகளை விற்ற அவர், பின்னர் அதிரசம், முறுக்கு, ரவா லட்டு உள்ளிட்ட பாரம்பரிய பலகாரங்களை தயாரித்து திருமணம், காதணி விழா, சீமந்தம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக ஆர்டரின் அடிப்படையில் வழங்கி வந்தார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொழிலையே முழு நம்பிக்கையுடன் செய்து வருகிறார். அவரது கைப்பக்குவத்தில் தயாராகும் அதிரசம் மற்றும் பிற பலகாரங்கள் பலரின் பாராட்டைப் பெற்று, ஏராளமான குடும்ப நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ளன.
இன்று அவரது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் நல்ல நிலையில் உள்ளனர். சிலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருவதோடு, அவரது பேத்தி மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார். இருப்பினும், “உழைத்து வாழ்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது” என்ற எண்ணத்தில் செல்லாயி பாட்டி இன்றும் தனது தொழிலை விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்.
“இந்த வயதிலும் ஏன் இன்னும் வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, அவர் அளித்த பதில் பலருக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. “மனுஷனா பிறந்துட்டா ஏதாவது சாதிக்கணும். கஷ்டப்படாம முன்னேற்றம் கிடைக்காது. வாழ்க்கையில் எவ்வளவு தடைகள் வந்தாலும் மனசு தளரக்கூடாது. தன்னம்பிக்கையோடு உழைத்தால் எந்த வயதிலும் நம்மால் சாதிக்க முடியும்,” என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார். செல்லாயி பாட்டியின் இந்த வாழ்க்கைப் பயணம், உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இருந்தால் வயது ஒரு தடையல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
Also Read: தாயுடன் கள்ளத்தொடர்பு; 2 சிறுவர்களைக் கொலை செய்த மகன்!



