இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உடலுக்கு தேவையான ‘ஒமேகா-3’ கொழுப்பு அமிலங்களைப் பெறவும் உணவில் மீன் சேர்த்துக்கொள்வதை மருத்துவர்கள் பரவலாகப் பரிந்துரைக்கின்றனர். மீன் உணவுகள் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரித்து இதயச் செயல்பாட்டை மேம்படுத்தினாலும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சந்தையில் கிடைக்கும் அனைத்து வகை மீன்களையும் சுவைக்க முடியாது என்பது பலரும் அறியாத உண்மையாகும். தவறான முறையில் பதப்படுத்தப்பட்ட மீன்களையோ அல்லது குறிப்பிட்ட வகை கடல் உணவுகளையோ உட்கொள்ளும்போது, இரத்த அழுத்தம் திடீரென அதிகரித்து பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்ற தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
குறிப்பாக, மீனை சமைக்கும் விதத்திலேயே அதன் ஊட்டச்சத்துகள் தீர்மானிக்கப்படுகின்றன. மீனை அதிக எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடும் போது, அதிலுள்ள நன்மை பயக்கும் ஒமேகா-3 அமிலங்கள் முற்றிலுமாக அழிந்துபோவதுடன், எண்ணெயில் உள்ள ‘டிரான்ஸ் கொழுப்புகள்’ இரத்த நாளங்களில் படிந்து இரத்த அழுத்தத்தை வெகுவாக உயர்த்துகின்றன. அதேபோல, உப்பு தடவி காயவைக்கப்படும் கருவாடு மற்றும் உப்பு மீன்களில் சோடியத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதால், இவற்றை உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் முற்றிலுமாகத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.
மேலும், ஆழ்கடலில் கிடைக்கும் கிங் மேக்கரல், சுறா, வாள்மீன் மற்றும் சூரை மீன் போன்ற வகைகளில் ‘பாதரசம்’ அதிகளவில் காணப்படுகிறது. இந்த நச்சு உலோகம் உடலுக்குள் சேரும்போது இதய மற்றும் இரத்த நாள அமைப்பை நேரடியாகச் சேதப்படுத்தி இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. அதேபோன்று, சந்தைகளில் விற்கப்படும் ‘டப்பா மீன்கள்’ கெட்டுப்போகாமல் இருக்கச் சேர்க்கப்படும் சோடியம் பென்சோயேட் மற்றும் இரசாயனப் பாதுகாப்பிகள், உடலில் கெட்ட கொழுப்பைக் கூட்டுவதால் இத்தகைய பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
எனவே, இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் உள்ளூர் சந்தைகளில் கிடைக்கும் புதிய நன்னீர் அல்லது குளத்து மீன்களைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது நல்லது. மீனை எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக குறைந்த எண்ணெயில் வறுத்தோ அல்லது குழம்பு வைத்தோ சமைக்கலாம். மீன் உடலுக்கு நல்லது என்றாலும், அதனை தினமும் உட்கொள்ளாமல் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை அளவோடு சாப்பிடுவதே இதயத்திற்கு ஆரோக்கியமானது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Read More : அதே 3ம் தேதி..!! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த முக.ஸ்டாலின்..!!



