டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு, விவசாயிகளுக்கான நிதியுதவி மற்றும் விளையாட்டுத் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளுக்காக ரூ.4.41 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, நீர்நிலைகள், குளங்கள் மற்றும் கால்வாய்களின் மேற்பரப்பில் மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் தகடுகளை அமைப்பதற்காக ‘பிரதமர் சூர்ய சரோவர் யோஜனா’ திட்டத்திற்கு ரூ.5,070 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிலங்களை கையகப்படுத்த வேண்டிய அவசியமின்றி மின் உற்பத்தியை பெருக்கவும், நீர் ஆவியாவதை தடுத்து பாசனத்திற்கு தேவையான தண்ணீரை சேமிக்கவும் இத்திட்டம் உதவும். தற்போது 700 மெகாவாட்டாக உள்ள மிதக்கும் சூரிய மின் உற்பத்தித் திறனை, அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 மெகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளின் பொருளாதார சுமையை குறைக்கும் ‘பிரதமர் கிசான் சம்மான் நிதி’ திட்டத்தை 2026-27 நிதியாண்டு முதல் 2030-31 வரை மேலும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.3,15,614 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நாட்டின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்யவும், ஆழ்கடலில் மறைந்துள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களைக் கண்டறிந்து பிரித்தெடுக்கவும் ‘சமுத்ர மந்தன்’ திட்டத்திற்கு ரூ.84,084 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இவற்றுடன் சேர்த்து, நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்குத் தரம் உயர்த்தவும், இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மேம்படுத்தவும் ‘கேலோ இந்தியா’ திட்டத்திற்கு ரூ.29,054 கோடியும், தேசிய விளையாட்டு அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் தடகளப் போட்டிகளை நடத்த ரூ.7,387 கோடியும் என விளையாட்டுத் துறைக்கு மொத்தம் ரூ.36,441 கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அமைச்சரவை உறுதி செய்துள்ளது.
Read More : Gift உடன் கியூட்டாக வந்த மோப்ப நாய் ராக்கி..!! சாகசங்களை கண்டு ரசித்த முதல்வர் விஜய்..!!


