உலகளாவிய வர்த்தக நகர்வுகள் மற்றும் இறக்குமதி வரிக் கொள்கைகள் காரணமாக தங்கத்தின் சந்தை விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,240 வரை உயர்ந்து நகைப் பிரியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 5)இரண்டு முறை உயர்வை சந்தித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 4) ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,200-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,360-ஆகவும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,06,880-ஆகவும் விற்பனையானது.
ஆனால், பிற்பகலில் மீண்டும் விலை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாலையில் கிராமுக்கு மேலும் ரூ.120 அதிகரித்து ரூ.13,480-க்கும், சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.107,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,240 வரை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக மாற்றமின்றி ஒரே விலையில் நீடித்து வந்த வெள்ளி, இன்று கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
Read More : தமிழகத்தின் மொத்த கடன் எத்தனை கோடி தெரியுமா? வட்டி மட்டுமே இவ்வளவா? நிதியமைச்சர் பரபரப்பு தகவல்..!!



