வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி அழைத்து சென்ற லாரி டிரைவரை, வேலூர் மாவட்ட காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
காட்பாடி தாலுகா, வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டைப் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31) என்பவருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், பிரகாஷ் அச்சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரை அழைத்துக்கொண்டு தலைமறைவானார். சிறுமியை காணாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருந்த இருவரையும் கடந்த 3 மாதங்களாகத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக ஆந்திரா சென்ற தனிப்படை போலீசார், இருவரையும் மீட்டு காட்பாடிக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கைதான பிரகாஷுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மனைவிகளும், 5 குழந்தைகளும் இருப்பது அம்பலமானது. இந்த உண்மைகளை மறைத்து, 16 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்றது தெரியவந்ததையடுத்து, லாரி டிரைவர் பிரகாஷைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், மீட்கப்பட்ட சிறுமி பாதுகாப்பிற்காக அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Read More : பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுறோமா? அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி..!!



