பிலிப்பைன்ஸ் நாட்டில் தாக்கிய கல்மேகி புயல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கச் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 6 பேரும் பலியான சோகமும் இதில் அடங்கும்.
புயலின் மையமாக விளங்கிய மத்திய பிராந்தியத்தில், குறிப்பாக செபு தீவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல குடியிருப்புகள் முற்றிலுமாக நீரில் மூழ்கின. வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல மக்கள் தங்கள் வீடுகளின் கூரைகளில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் அளித்த தகவலின்படி, மத்திய மாகாணமான செபுவில் மட்டும் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர். அருகிலுள்ள போஹோல் தீவில் ஒரு பலி பதிவாகியுள்ளது.
புயல் நிலப்பரப்பைத் தாக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பே, செபு சிட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 183 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இது வழக்கமான மாத சராசரியான 131 மில்லிமீட்டரைவிட மிக அதிகம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். செபு நகரவாசிகள், “28 ஆண்டுகளாக இங்கு இருக்கிறோம். இதுதான் நாங்கள் அனுபவித்ததிலேயே மிக மோசமான வெள்ளம்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டர் விபத்து மற்றும் மீட்புப் பணி :
இதற்கிடையே, பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ‘ஹியூய்’ ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, மிண்டானாவ் தீவின் அகுசன் டெல் சூர் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் பலியான 6 பணியாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது
புயலின் நகர்வு மற்றும் பாதிப்புகள் :
மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசிய கலமேகி புயல், நாட்டின் விசாயாஸ் தீவுகளைக் கடந்து வடக்கு பலவான் மற்றும் தென் சீனக் கடல் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் விசாயாஸ் மற்றும் மின்டானாவ் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சராசரியாக 20 புயல்களைச் சந்திக்கும் பிலிப்பைன்ஸில், வறுமையில் வாடும் மில்லியன் கணக்கான மக்களின் குடியிருப்புகள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. இந்த புயல், பிலிப்பைன்ஸைத் தாக்கிய பிறகு வியாழன் இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஏற்கனவே வெள்ளப்பெருக்கால் 40 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : இன்று ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்..!! மறக்காமல் இதை செய்யுங்கள்… மறந்தும் கூட இதை செய்து விடாதீர்கள்..!!



