கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல், 22 வயது வாலிபரை கத்தியால் குத்தியும், சுத்தியலால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் மகன் அஸ்வின் வயது 22. கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அஸ்வினுக்கு விஷ்ணு என்ற நண்பர் இருந்தார். தினமும் இரவு விஷ்ணுவின் வீட்டில் தங்குவது அஸ்வினின் வழக்கமாக இருந்தது.
நேற்று இரவும் அஸ்வின், விஷ்ணுவின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் விஷ்ணு தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நள்ளிரவில் விஷ்ணுவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் சென்று பார்த்துள்ளார்.
அப்போது அஸ்வின் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கிணத்துக்கடவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும், அஸ்வினுக்கும் சில தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது.
10-ம் வகுப்பில் தோல்வியடைந்த அந்த சிறுவன், பள்ளிக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். அந்த சிறுவனை பார்க்கும் இடத்தில் எல்லாம் ஒழுங்காக பள்ளிக்கு செல்லும்படி அஸ்வின் கண்டித்துள்ளார். இதனால் சிறுவன் அஸ்வின் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளான்.
அட்வைஸ் பிடிக்காத சிறுவன், அஸ்வினை தீர்த்துக்கட்ட முடிவு செய்து தனது நண்பரான 21 வயது மாதேஷின் உதவியை நாடியுள்ளான். வழக்கம்போல் நேற்று இரவு அஸ்வின் விஷ்ணுவின் வீட்டுக்குச் சென்றதை அறிந்த இருவரும், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து சுத்தியலால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளனர்.
அதன்பிறகு, அஸ்வினின் உடலருகே கத்தியை வாயில் வைத்து இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். மேலும், “எங்களிடம் மோதினால் இதுதான் நிலைமை” என்று கூறி, அஸ்வினின் உடலை வீடியோவாக பதிவு செய்து தங்களது நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குடிப்பதை நிறுத்திவிட்டு ஒழுங்காக பள்ளிக்குச் செல்லுமாறு அறிவுரை கூறிய நபரை, சிறுவன் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்து, அதை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : BREAKING | விவகாரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா..!! நிம்மதியில் முதல்வர் விஜய்..!! அடுத்த பிளான் என்ன?



