யுபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ரூ. 2,000 தொகைக்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை கட்டணம் (MDR) விதிக்க அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சட்டத் திருத்த மசோதாவில், மின்னணுப் பணப்பரிமாற்றங்களுக்கு வங்கிகளும் சேவை நிறுவனங்களும் கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய கட்டண முறை கொண்டுவரப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு தரப்புத் தரவுகளின்படி, மொத்த யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கையில் ரூ. 2,000 அளவுக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் அளவு வெறும் 5 சதவீதம் மட்டுமே. ஆனால், மொத்த பண மதிப்பின் அடிப்படையில் இவை 65 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன. கிரெடிட் கார்டு போன்று இதர செலவுகள் இதில் இல்லாததால், வசூலிக்கப்படும் இந்தக் கட்டணத்திற்கு குறிப்பிட்ட ஒரு உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அதேவேளையில், ரூ. 2,000 வரை செய்யப்படும் சிறிய அளவிலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் எதுவும் இருக்காது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் காய்கறி, பால், மளிகைப் பொருட்கள் வாங்குவது மற்றும் வாகனக் கட்டணங்கள் செலுத்துவது போன்ற சாமானிய மக்களின் அன்றாடச் செலவுகள் இதனால் பாதிக்கப்படாது. கிட்டத்தட்ட 95 சதவீதப் பரிவர்த்தனைகள் கட்டண வரம்பிற்குள் வராது என்பதால், வழக்கமான பணப்பரிமாற்றங்கள் எப்போதும் போலத் தொடரும். மேலும், இந்தக் கட்டணத்தை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பதா அல்லது தாங்களே ஏற்றுக்கொள்வதா என்பது அவர்களின் முடிவிற்கே விட்டுவிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
Read More : “அவமானத்தை நான் தாங்கிக் கொள்கிறேன்”..!! உதயநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்..!!



