அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஊர்கள், மலைகளுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் இவ்விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை என 30 பெயர்கள் சீன மொழியின் எழுத்துக்களிலும், திபெத்திய மொழியிலும் புதிய பெயர்கள் சூட்டி இருப்பதாக சீனாவில் இருந்து வெளிவரும் சைனா மார்னிங் போஸ்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த சனிக்கிழமை அன்று சீன குடிமை விவகாரத்துறை அமைச்சகம், அருணாச்சல பிரதேசத்திலுள்ள திபெத்திய தன்னாட்சி 30 பகுதிகளுக்கு பெயர்களை சூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 2017, 2019, 2021 என மூன்று முறை அருணாச்சல பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் புதிதாக பெயர்களை சூட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இயற்கையாகவே அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருபகுதி. அதை சீனாவிற்கு விட்டுக்கொடுக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கமாட்டோம்” என தெரிவித்தார். அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேலும் 30 இடங்களுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளது. இது இருநாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது