தமிழக அரசியலில் எதிர்காலத்தில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கும் அவருக்கும் இடையே புதிய அரசியல் போட்டி உருவாகலாம் என அவர் கணித்துள்ளார்.
அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நீண்டகாலமாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருபவர் ரத்தன் பண்டிட். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததாகவும், தற்போதைய முதலமைச்சர் விஜயுடனும் நீண்டகால தொடர்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலின்போதும் ரத்தன் பண்டிட்டின் கணிப்பு கவனம் பெற்றதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே விஜயை நேரில் சந்தித்து அவருக்கு வெற்றி வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிவில் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், தனது கணிப்பு குறித்து அவர் மீண்டும் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரத்தன் பண்டிட்டுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் விஜய் குறித்து பேசிய அவர், விஜயின் கையில் இருக்கும் சிவப்பு கயிறு முருகப்பெருமானின் அருளை குறிக்கும் என்றும், அவரது அரசியல் பயணம் வெற்றியை நோக்கி செல்லும் என்றும் தனது ஜோதிட கணிப்பை தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின், உதயநிதி குறித்து என்ன கணிப்பு?
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் குறித்தும் ரத்தன் பண்டிட் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இனி அவரது அரசியல் பயணம் ஓய்வை நோக்கிச் செல்லும் என்றும், வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் கணித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தொடர்பாகவும் அவர் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். விஜய் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் உதயநிதி முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கலாம் என்றும், தற்போதைய அரசியல் சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவருக்கு அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அண்ணாமலைக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இல்லை என்றும், தமிழக அரசியலில் இனி விஜய் முக்கியமான சக்தியாக இருப்பார் என்றும் ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார்.
தனுஷின் அரசியல் வருகை ஏற்படுத்தும் மாற்றம்?
ரத்தன் பண்டிட்டின் கணிப்பில் அதிக கவனம் பெற்ற மற்றொரு விஷயம் நடிகர் தனுஷின் அரசியல் எதிர்காலம்.
எதிர்காலத்தில் தனுஷ் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அவர் அரசியலில் களமிறங்கும் நேரத்தில் தமிழகத்தில் புதிய போட்டி உருவாகும் என்றும் ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார்.
அதுவரை விஜய்க்கு குறிப்பிடத்தக்க அரசியல் போட்டி இருக்காது என்றும், தனுஷின் அரசியல் வருகைக்குப் பிறகு தமிழக அரசியல் களம் புதிய கட்டத்தை நோக்கி நகரக்கூடும் என்றும் அவர் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஜோதிட கணிப்புகள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், சமூக வலைதளங்களிலும் தனுஷின் அரசியல் வருகை குறித்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பு: மேற்கண்டவை ரத்தன் பண்டிட் தெரிவித்த ஜோதிடக் கணிப்புகளாகும். தனுஷ் அரசியலுக்கு வருவது தொடர்பாக அவரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.



