இயற்கையாகவே கருவுறுதலை அதிகரிக்கும்” என்று கூறப்படும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த அறிவுரைகளுக்கு சமூக வலைத்தளங்களில் பஞ்சமே இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பது நிதர்சனமான உண்மை என்றாலும், இதுபோன்ற தவறான தகவல்களால் நோயாளிகள் மருத்துவ நிபுணர்களிடம் முறையான சிகிச்சை பெறாமல் ஏமாந்து போகும் சம்பவங்கள் பல நடந்துள்ளன.
இந்தியா ஐவிஎஃப் ஃபெர்டிலிட்டி அமைப்பின் இணை நிறுவனரும், மருத்துவ இயக்குநருமான டாக்டர் ரிச்சிகா சஹாய் சுக்லாவின் கூற்றுப்படி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் கருவுறுதல் சிகிச்சைக்குத் துணையாக இருக்க வேண்டுமே தவிர, அதற்கு மாற்றாக அமையக் கூடாது. பல தம்பதிகள் தங்களுக்கு உள்ள அடிப்படை மருத்துவப் பிரச்சனைகளை பரிசோதித்து அறிந்துகொள்வதற்குப் பதிலாக, இணையத்தில் பரவும் ஆலோசனைகளைப் பின்பற்றுவதிலேயே தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை நிச்சயமாக உதவுகிறது. நல்ல தூக்கம், சீரான உடல் எடையைப் பராமரித்தல், புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தைக் கைவிடுதல், தினசரி நடைப்பயிற்சி, எளிய வீட்டு உணவு – இவை அனைத்தும் கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகின்றன. ஏறக்குறைய ஒவ்வொரு நோயாளிக்கும் இந்த மாற்றங்களை நான் பரிந்துரைக்கிறேன்,” என்று மருத்துவர் சுக்லா கூறுகிறார். இருப்பினும், “உதவுவது என்பது குணப்படுத்துவதற்குச் சமமல்ல” என்றும் அவர் ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.
டாக்டர் சுக்லாவின் கூற்றுப்படி, ஒரு குறிப்பிட்ட உணவு, டிடாக்ஸ் (detox) அல்லது சப்ளிமெண்ட் (supplement) ஆகியவை கருவுறாமமைக்கான மருத்துவக் காரணங்களைச் சரிசெய்யும் என்று நம்புவது மிகப் பெரிய தவறான கருத்தாகும். எந்தவொரு ஸ்மூத்தியும் அடைபட்டுள்ள கருக்குழாயைத் திறக்க முடியாது. விதைகளைச் சாப்பிடுவதால் எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனை தீராது. ஒரு பெண்ணின் கருப்பைகள் வயதின் காரணமாக ஏற்கெனவே இழந்துவிட்ட கருமுட்டைகளை ஒரு டிடாக்ஸ் செயல்முறையால் மீண்டும் கொண்டு வர முடியாது. மிகவும் குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கையை எந்தவொரு மூலிகையும் சரிசெய்வதை நான் பார்த்ததில்லை. இவை மருத்துவப் பிரச்சனைகள். இதற்கு முதலில் முறையான நோயறிதல் தேவை, யூகங்கள் அல்ல.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உடலுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், கருக்குழாய் அடைப்பு, எண்டோமெட்ரியோசிஸ் அல்லது கடுமையான ஆண்-சார்ந்த கருவுறாமை போன்ற நிலைமைகளுக்கு முறையான மருத்துவ நோயறிதலும் சிகிச்சையும் தேவை என்பதை அவர் விளக்குகிறார்.
கருவுறுதல் நிபுணரின் கூற்றுப்படி, ஆரோக்கியப் பொருட்களுக்காகப் பணத்தைச் செலவிடுவது மிகப்பெரிய ஆபத்து அல்ல, மருத்துவப் பரிசோதனையைத் தாமதப்படுத்துவதே மிகப்பெரிய ஆபத்தாகும். “சமூக வலைத்தள வீடியோக்கள் உங்களுக்குச் சொல்லாத ஒரு விஷயம் இதுதான்: இந்த பொய்களுக்கான உண்மையான விலை நீங்கள் பொடிகளுக்குச் செலவிடும் பணம் அல்ல; அது நேரம். கருவுறுதல் என்பது ஒரு கடிகாரத்தைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது, குறிப்பாக 35 வயதிற்குப் பிறகு. இரண்டு வருடங்களாக ஆரோக்கியப் போக்குகளைப் பின்பற்றுவது, சிகிச்சைக்கு மிகவும் ஏற்ற காலத்தை அமைதியாக விழுங்கிவிடும்,” என்கிறார் டாக்டர் சுக்லா. இந்தத் தாமதம் சிகிச்சையின் முடிவுகளை, குறிப்பாக வயதாகும்போது இயற்கையாகவே கருவுறுதல் திறன் குறையும் பெண்களுக்கு, பெருமளவில் பாதிக்கும் என்று அவர் கூறுகிறார்.
உடல் ஆரோக்கியத்திற்கு அப்பால், இந்தப் போக்குகள் பல நேரங்களில் தம்பதிகள் கருத்தரிக்காதபோது தங்களைத் தாங்களே குறை கூறிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுவதாக டாக்டர் சுக்லா கூறுகிறார். ஸ்மூத்தி பலனளிக்காதபோது, தம்பதிகள் தங்களைக் குறை கூறிக் கொள்கிறார்கள். ‘ஒருவேளை நாம் அதைச் சரியாகச் செய்யவில்லையோ’ என்று நினைக்கிறார்கள். தனது மருமகனின் பிறந்தநாளில் ஒரு துண்டு கேக் சாப்பிட்டுவிட்டோமே என்று என் கிளினிக்கில் ஒரு பெண் அழுததை நான் பார்த்திருக்கிறேன். இது ஆரோக்கியம் அல்ல. இது ஆரோக்கியம் என்ற பெயரில் உள்ள பயம்.”
கருவுறுதல் என்பது ஒருபோதும் பரிபூரணத்திற்கான சோதனையாகவோ அல்லது குற்ற உணர்ச்சியாகவோ மாறக்கூடாது என்று அவர் நம்புகிறார். வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருத்துவச் சிகிச்சை ஆகிய இரண்டையும் எதிரெதிராகப் பார்க்காமல், இரண்டையும் பின்பற்றுமாறு டாக்டர் சுக்லா தம்பதிகளை ஊக்குவிக்கிறார். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்; இரண்டையும் பயன்படுத்துங்கள். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைத் தொடருங்கள்; அவை ஒவ்வொரு சிகிச்சையும் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன.
மருத்துவப் பரிசோதனைக்கான சரியான நேரம்: நீங்கள் 35 வயதிற்குட்பட்டவராக இருந்து, ஓராண்டாக முயற்சித்து பலனில்லையெனில், மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். 35 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஆறு மாதங்களாகியும் கருத்தரிக்கவில்லை எனில், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். ஒரு விந்தணு பரிசோதனை, ஒரு ஹார்மோன் பரிசோதனை மற்றும் ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகியவை பல ஆண்டுகளாக உங்களின் யூகங்கள் சொல்லாத விஷயங்களை ஒரே வாரத்தில் சொல்லிவிடும்.
சரியான உணவை உண்ணுங்கள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள், உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள், ஆனால் இணையத்தில் பரவும் ஆலோசனைகளை நம்பி மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதைத் தாமதப்படுத்தாதீர்கள் என்பதே அவரது எளிமையான செய்தியாகும். கருவுறுதலைப் பொறுத்தவரை, சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.


