விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மனித விண்வெளிப் பயணங்களில் தங்களது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, தனது நிலவு தளத் திட்டத்தில் (Moon Base Programme) இணையுமாறு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்கால நிலவு திட்டங்கள், விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்த இருநாடுகளின் பேச்சுவார்த்தைக்கு இடையே இந்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. அமைதியான முறையில் நிலவை ஆராய்வதற்கும், அங்கு மனிதர்களை நீண்டகாலம் தங்க வைப்பதற்குமான அமெரிக்க தலைமையிலான ‘ஆர்டெமிஸ் ஒப்பந்தத்தில்’ (Artemis Accords) இந்தியா ஏற்கனவே ஒரு அங்கமாக உள்ளது.
இருப்பினும், நாசா மற்றும் இஸ்ரோ இடையேயான கூட்டணியில் மூன் ஃபேஸ் திட்டம் மற்றொரு முக்கிய மைல்கல்லாகும். மனித விண்வெளிப் பயணங்களில் இணைந்து செயல்படுவதற்காக இரு அமைப்புகளும் ஒரு மூலோபாய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் இந்திய விண்வெளி வீரர்களின் பயிற்சிக்கும், விரிவான விண்வெளிப் பயண ஒத்துழைப்பிற்கும் வழிவகை செய்கிறது.
விண்வெளித் துறையில் அமெரிக்காவின் மிக நம்பிக்கையான கூட்டாளிகளில் ஒருவராக இந்தியா திகழ்கிறது என தூதர் செர்ஜியோ கோர் புகழாரம் சூட்டினார். புவி கண்காணிப்பு, செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளிப் பயணங்கள் என இரு நாடுகளின் கூட்டுப் பங்களிப்பு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. பூமி மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட ‘நிசார்’ (NISAR) திட்டம் இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
நாசாவின் இந்த நிலவு தளத் திட்டத்தில் இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக இணையும் பட்சத்தில், நிலவு ஆராய்ச்சிகள், விண்கலன்கள், அறிவியல் கருவிகள் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பத்தில் தனக்கிருக்கும் அனுபவத்தையும் திறமையையும் இந்தியா இதில் முழுமையாகப் பயன்படுத்த முடியும். இந்தக் கூட்டாண்மை, சர்வதேச நிலவு திட்டங்கள் மற்றும் நிலவின் மேற்பரப்பில் மனிதர்கள் செயல்படுவதற்கான கருவிகளை உருவாக்குவதில் இந்திய விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும்.
மேலும், விண்வெளித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், குவாண்டம் மற்றும் பயோடெக்னாலஜி போன்ற துறைகளில் இரு நாடுகளையும் நெருக்கமாக்கும் ‘US-India TRUST’ திட்டத்தின் நோக்கத்தோடும் இது நேரடியாக ஒத்துப்போகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, நாசாவின் நிலவு திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்பது, இஸ்ரோவின் ‘சந்திரயான்’ திட்டத்தின் இலக்குகளுக்கும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகளுக்கும் பெரும் பக்கபலமாக அமையும்.


