தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரத் தம்பதியான சூர்யா – ஜோதிகா, தங்களது திருமண வாழ்க்கை மற்றும் ஒருவருக்கொருவர் வழங்கும் ஆதரவு குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளனர். குறிப்பாக, சூர்யாவை ‘கிரீன் ஃபிளாக்’ கணவர் என ஜோதிகா பாராட்டியதுடன், இருவரும் வீட்டில் சமமானவர்கள் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு ஆரோக்கியமான உறவில் சமத்துவம் ஏன் முக்கியம் என்பது குறித்து உறவு நிபுணர் விளக்கியுள்ளார்.
சூர்யாவுடன் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்து வரும் ஜோதிகா, கணவரின் குணாதிசயங்களைப் பற்றி பேசும்போது, சூர்யா சிறந்த கணவர் என்றும், அவரிடம் இயல்பாகவே சமத்துவமான சிந்தனை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். குடும்ப வாழ்க்கையில் ஆண், பெண் இருவரும் சமமானவர்கள் என்ற எண்ணம் மனதளவில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோதிகாவின் கருத்து குறித்து பேசிய உளவியல் நிபுணரும் உறவு ஆலோசகருமான டெல்னா ராஜேஷ், உறவில் சமத்துவம் என்பது வீட்டு வேலைகளை இருவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வது அல்லது இருவரும் ஒரே அளவு சம்பாதிப்பது மட்டுமல்ல என்று கூறியுள்ளார். அது முதலில் ஒருவரை ஒருவர் எவ்வாறு மதிக்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள் என்பதில் வெளிப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு உறவில் இருவரின் பங்களிப்புகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், ஒருவரின் பங்களிப்பை மற்றொருவருடையதை விட உயர்ந்ததாகக் கருதக்கூடாது. கருத்து வேறுபாடு ஏற்படும் நேரங்களில் இருவரின் கருத்துகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா, முக்கிய முடிவுகளை இருவரும் இணைந்து எடுக்கிறார்களா என்பதும் உறவில் சமத்துவத்தை வெளிப்படுத்தும் அம்சங்களாகும்.
அதேபோல், ஒருவரின் கனவுகள் மற்றும் விருப்பங்களுக்கு மட்டும் தொடர்ந்து முன்னுரிமை அளிக்காமல், இருவரின் தனிப்பட்ட இலக்குகளுக்கும் மதிப்பு கொடுப்பதும் அவசியம். பாலினத்தைப் பொருட்படுத்தாமல் இருவரின் உணர்வுகளையும் ஒரே அளவில் கவனிப்பதும் ஆரோக்கியமான உறவின் முக்கிய அம்சமாகும்.
மேலும், உண்மையான சமத்துவம் என்பது ஒருவர் தனது துணையிடம் எவ்வளவு பாதுகாப்பாக தனது கருத்துகளை வெளிப்படுத்த முடிகிறது என்பதிலும் தெரியும் என நிபுணர் தெரிவித்துள்ளார். தவறு செய்தால் அவமானப்படுத்தப்படுவோம் என்ற பயமின்றி அதை ஒப்புக்கொள்வது, கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவது, தனிப்பட்ட வளர்ச்சிக்காக முயற்சி செய்வது போன்றவற்றுக்கு இருவருக்கும் சமமான சுதந்திரம் இருக்க வேண்டும்.
குடும்பத்தில் பெற்றோர் ஒருவரை ஒருவர் எப்படி நடத்திக் கொள்கிறார்கள் என்பதை குழந்தைகளும் கவனித்து கற்றுக்கொள்கிறார்கள். யார் மற்றவரை மதிக்கிறார்கள், யார் மன்னிப்பு கேட்கிறார்கள், யாருடைய கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, பிரச்னைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பதன் மூலம் குழந்தைகளின் உறவு குறித்த புரிதலும் உருவாகிறது.



