உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணை’ அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கப் போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் தடையை “இரும்புச் சுவர்” என்று குறிப்பிட்டுள்ளதோடு, இதற்கு எதிராக ஈரானால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். ஈரானின் ராணுவ வலிமையையும் அதன் தலைமையின் ஸ்திரத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பிய ட்ரம்ப், ஈரானிடம் தற்போது கடற்படையோ அல்லது விமானப்படையோ இல்லை என்றும், அங்கு எஞ்சியுள்ள ராணுவ வீரர்களுக்கு சம்பளம்கூட வழங்கப்படவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், ஈரானிடம் பணம் எதுவும் இல்லை என்றும், அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மற்றொருபுறம், அமெரிக்கா தனது நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா தனது சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், கடற்படைத் தடையை விலக்க வேண்டும், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பொருளாதாரத் தடைகளை நீக்கி முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவல்களை மறுத்துள்ள ஈரான், தற்காலிக ஒப்பந்தம் முறையாக நடைமுறைக்கே வரவில்லை என்பதால், அதை நீட்டிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறிச் செல்ல முயன்ற பனாமா கொடி பொருந்திய ‘எம்/வி வேலா நோவா’ என்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி அதை முடக்கியுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்த நீரிணை மூடப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



