மூச்சை எவ்வளவு நேரம் அடக்கி வைத்திருக்க முடிகிறது என்பதை கொண்டு ஒருவரின் நுரையீரல் ஆரோக்கியத்தை முழுமையாக மதிப்பிட முடியாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுவாக, ஒருவர் நீண்ட நேரம் மூச்சை அடக்கும் போது நுரையீரலின் திறன் சிறப்பாக இருப்பதாக பலரும் தவறாக கருதுகின்றனர். ஆனால், மூச்சை அடக்கும் தருணத்தில் உடலுக்குள் முற்றிலும் வேறு விதமான உடலியல் மாற்றங்களே நிகழ்கின்றன. நாம் மூச்சை அடக்கிய உடனேயே, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை உடலின் செல்கள் பயன்படுத்தத் தொடங்குகின்றன.
அதே வேளையில், வெளியேற வேண்டிய கார்பன் டை ஆக்சைடு ரத்தத்தில் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாகவே, உடனே மூச்சை வெளியேற்ற வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டு, நெஞ்சுப் பகுதியில் ஒருவித தவிப்பும் தன்னிச்சையான உடல் அசைவுகளும் உண்டாகின்றன.
தொடர்ந்து நீண்ட நேரம் மூச்சை அடக்கி வைக்கும் போது, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கணிசமாகக் குறைந்து தலைசுற்றல், உடல் பலவீனம், மனக்குழப்பம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும். ஆக்சிஜன் அளவு மிகக் கடுமையான நிலைக்குக் குறையும் போது மயக்கமும் சுயநினைவின்மையும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதய மற்றும் நுரையீரல் சார்ந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் உரிய மருத்துவ ஆலோசனையின்றி இத்தகைய மூச்சுப் பயிற்சிகளையோ அல்லது சோதனைகளையோ சுயமாக செய்யக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
ஒருவர் எவ்வளவு நேரம் மூச்சை அடக்குகிறார் என்பது அவரது உடற்பயிற்சிப் பழக்கம், மூச்சைக் கட்டுப்படுத்தும் பயிற்சி முறை மற்றும் கார்பன் டை ஆக்சைடைத் தாங்கும் உடலின் திறன் ஆகியவற்றை மட்டுமே பொறுத்தது. எனவே, மூச்சு அடக்கும் நேரத்திற்கும் நுரையீரலின் உண்மையான செயல்பாட்டுத் திறனுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. நுரையீரல் ஆரோக்கியம் குறித்து சந்தேகம் அல்லது பாதிப்பு ஏதும் இருப்பின், சுயமாகச் சோதித்துப் பார்க்காமல் முறையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்துகொள்வதே பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Read More : தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாட வேண்டும்..!! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!



