எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கூற்றை ஈரான் மறுத்துள்ளது. அந்தப் பகுதி ஈரான் நாட்டின் கட்டுப்பாட்டில்தான் தொடர்ந்து இயங்கி வருவதாக அந்நாட்டின் உயர் அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் பசீஜ் படைப்பிரிவுத் தலைவர் ஹுசைன் தாயேப் பேசுகையில், “இன்று ஹார்முஸ் ஜலசந்தி இஸ்லாமிய குடியரசான ஈரானின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. எங்கள் நாடு முழு பாதுகாப்போடு தனது பாதையில் தொடர்ந்து பயணிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராஃக்சி தனது எக்ஸ் தளத்தில், “அமெரிக்கா தனது உளவுத்துறை தோல்விகளால் தொடர்ந்து தவறான கணக்குகளைப் போட்டு வருகிறது. ஈரானுக்கு எதிரான போரில் தவறான கணக்கு போட்ட அமெரிக்கா, இப்போது ஹார்முஸ் ஜலசந்தி விஷயத்திலும் மிகப்பெரிய தவறான கணக்கைப் போட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணைய உறுப்பினரான பெஹ்னம் சைதி பேசுகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு மட்டுமே இந்த வழியே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “போர் அல்லது அமைதி என எந்தச் சூழலாக இருந்தாலும், இஸ்ரேல் நாட்டுக்குச் சொந்தமான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்கப்பட மாட்டாது” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
முன்னதாக, ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலகின் முக்கிய எரிபொருள் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவின் இந்தத் தடையை ‘எஃகு சுவர்’ எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்காவிற்கு முழு கட்டுப்பாடு உள்ளது. அதை நாங்களே தொடர்ந்து வைத்திருப்போம் என்று நினைக்கிறேன். இதைக் கட்டுப்படுத்த ஈரானால் எதுவுமே செய்ய முடியாது” எனக் கூறியிருந்தார்.
இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியே ஒரு மாற்றுப் பாதையை உருவாக்குவது குறித்து ஈரானும் ஓமன் நாடும் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், இதுவரை எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. அப்படியே மாற்றுப் பாதை அமைக்கப்பட்டாலும், கடல்வழிப் போக்குவரத்து உடனடியாகச் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா தனது தூதரக ரீதியிலான கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்தால் மட்டுமே வழக்கமான போக்குவரத்து மீண்டும் தொடங்க அனுமதிப்போம் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.



