சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு அளிக்க வேண்டிய மரியாதை மற்றும் சட்டமன்ற மாண்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த உறுப்பினர்கள் கற்றுத்தர வேண்டும் என அமைச்சர் ரமேஷ் பேசியது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தவெக அமைச்சர் ரஞ்சித் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அவையின் கண்ணியத்தை உறுப்பினர்கள் அனைவரும் கட்டிக்காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ரமேஷ், அவையின் மூத்த உறுப்பினரான ஓ.பன்னீர்செல்வம் கூறும் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு சட்டமன்ற மாண்பைக் கற்றுக்கொள்ளப் புதிய உறுப்பினர்களான தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதேநேரம், அண்ணாவின் ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற தாரக மந்திரத்தை முதலமைச்சர் விஜய் முழுமையாகப் பின்பற்றி வருவதை சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்ற மாண்பை தங்களுக்குக் கற்றுத் தருவது போலவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கற்றுத்தர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக, 8 கோடி மக்களின் பிரதிநிதியாகத் திகழும் முதலமைச்சர் அவைக்குள் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்று உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்ற அடிப்படை நாகரிகத்தை அவருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சாடினார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு, எதிர்க்கட்சித் தலைவருக்கு யாரும் தனியாகக் கண்ணியத்தைக் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை என்றார். மேலும், கடந்த காலங்களில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோதும் கூட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தியதில்லை என்றும், இது அவரவர் விருப்பம் சார்ந்த விஷயமே தவிர குற்றமோ குறையோ அல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை கூறி அமைச்சர் ரஞ்சித் குமார் பேசியது தவறு. அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
Read More : கர்நாடகா ஏன் தண்ணீர் திறக்கவில்லை?. மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்ற உத்தரவு!. உச்சநீதிமன்றம் அதிரடி!



