சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடைபெறவிருக்கும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் தமிழகம் வந்தடைந்தனர்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியின் முதலமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ‘தென் மாநில முதல்வர்கள் மாநாடு’ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார்.
இந்த தெற்கு மண்டல குழுவிற்கான தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், துணைத்தலைவராக முதல்வர் விஜய்யும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவைப் பலப்படுத்துவது, நீர்வளப் பகிர்வு, குற்றங்கள் தடுப்பு, எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
காவேரி மற்றும் மேகதாது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல இருந்த நிலையில், போராட்டம் காரணமாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த பயணத்தை முதல்வர் ரத்து செய்தார். அதேநேரத்தில் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தமிழகம் வந்துள்ளார். சென்னை வந்துள்ள டி.கே.சிவகுமாருடன் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும், கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்தும் முதல்வர் விஜய் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



