திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நிலையில், மனைவியின் தகாத உறவால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொள்ளிடம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (44). தச்சுத் தொழில் செய்து வந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் பணியாற்றி வந்துள்ளார். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இவரது மனைவி துர்காதேவி (41).
வெங்கடேசன் வெளிநாட்டில் இருந்த காலகட்டத்தில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலகுரு (40) என்பவருக்கும் துர்காதேவிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெங்கடேசனுக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தனது மனைவியைக் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து துர்காதேவி, மயிலாடுதுறையில் உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பாலகுருவும் அங்கு சென்று துர்காதேவியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்களால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேசன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு, தனது செல்போனில் உள்ள வாட்ஸ்அப் பதிவில், தனது மரணத்துக்கு பாலகுருதான் காரணம் என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெங்கடேசனின் தாயார் அலமேலு (60), புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், வெங்கடேசனை தற்கொலைக்கு தூண்டியதாக பாலகுருவை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள துர்காதேவியை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



