தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் தொல்லை குறித்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில், அதனை திரும்பப் பெறுமாறு மிரட்டல் விடுக்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, தென்மண்டல ஐ.ஜி.யிடம் அவர் நேரடியாக புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், தவெக செயற்குழு உறுப்பினராக உள்ளார். கட்சியில் கூடுதல் பொறுப்பு பெற்றுத் தருவதாக கூறி, அமைச்சர் ஸ்ரீநாத்தின் நெருங்கிய நண்பர் ரூஸ்வெல்ட் மற்றும் நகரச் செயலாளர் நிவாஷ் கண்ணன் ஆகியோர் தன்னிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சிபாஷ் என்பவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, புகாரை திரும்பப் பெற வலியுறுத்தி தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக பெண் நிர்வாகி தற்போது தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரியிடம் அளித்துள்ள மனுவில், கடந்த 19ஆம் தேதி தனது வீட்டுக்கு வழக்கறிஞர் ஒருவர் அனுப்பப்பட்டதாகவும், மாவட்டச் செயலாளர் பிரைட்டரை சந்தித்து புகாரை வாபஸ் பெறுமாறு கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சமரசம் செய்து கொண்டது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ள தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், பின்னர் மாவட்டச் செயலாளர் மீது அளித்த புகார்களை அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என அவரது உறவினர்கள் வளன் மற்றும் போர்ஜியா ஆகியோர் தொலைபேசியில் மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அந்தப் பெண் நிர்வாகி, “அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் என்பதால், நான் புகார் அளித்தவர்களுக்கு எதிராக போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். கடந்த 19ஆம் தேதி இரவு என்னை மிரட்டி எனது செல்போனையும் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதால், எனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதும், புகாரை வாபஸ் பெற மிரட்டியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஐ.ஜி.யிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.



