தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அதற்கான வாகனங்களை தேர்வு செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களின் கார் மாடல்கள் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சட்டப்பேரவையில் சமீபத்தில் பேசிய முதல்வர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனுடன், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் செலவு உள்ளிட்டவற்றை சமாளிக்க மாதந்தோறும் ரூ.1 லட்சம் கூடுதல் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களுக்கான வாகனங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. முதற்கட்டமாக, ஒரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 6 வகையான கார் மாடல்கள் தலைமைச் செயலக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்த வாகனங்களின் வசதிகள், செயல்திறன் உள்ளிட்ட அம்சங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வேறு சில நிறுவனங்களின் கார் மாடல்களும் விரைவில் தலைமைச் செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாகனங்களின் பயன்பாடு மற்றும் தகுதியை மதிப்பிடும் வகையில் டெஸ்ட் டிரைவ் நடத்தப்பட்ட பின்னர், அதில் இருந்து ஒரு மாடல் இறுதி செய்யப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் மாடலில் மொத்தம் 234 கார்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக பரிசீலனையில் உள்ள கார்களின் விலை சுமார் ரூ.20 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எம்.எல்.ஏ.க்களுக்கான புதிய கார்கள் தொடர்பான அரசு நடவடிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது.
Also Read: பாலியல் புகாரை வாபஸ் பெற மிரட்டல்? தவெக பெண் நிர்வாகி ஐ.ஜி.யிடம் பரபரப்பு புகார்!



