மும்பையின் புலேஷ்வரம் பகுதியில் புகழ்பெற்ற ‘புலேஷ்வரச்சா ராஜா விநாயகர் சிலையைக் கொண்டு செல்லும் ஊர்வலத்தின் போது, பிரம்மாண்டமான சிலை திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
சனிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 22) சுமார் 9:51 மணியளவில் புலேஷ்வரத்தில் உள்ள கபூர்கானா அருகில் உள்ள ஜெய அம்பே சவுக் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பிரிஹன்பும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
விபத்து எப்படி நடந்தது?
ஊர்வலத்தின் போது கொண்டு செல்லப்பட்ட 22 அடி உயர விநாயகர் சிலையில் பொருத்தப்பட்டிருந்த போல்டுகளில் ஏற்பட்ட பழுது காரணமாக, அந்தப் பிரம்மாண்ட சிலை எதிர்பாராதவிதமாகச் சரிந்து கீழே விழுந்தது. கீழே விழுந்த வேகத்தில் சிலை உடைந்து நொறுங்கியதுடன், அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது விழுந்ததில் இந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சங்கெட் நெவ்ஷே (33) மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி (30) ஆகிய இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், 5 மற்றும் 7 வயதுடைய சிறுமிகள் உள்பட 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென சிலை கவிழ்ந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் சோகமும் ஏற்பட்டது.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், மும்பை காவல்துறை, தீயணைப்புப் படை, மாநகராட்சி (BMC) பணியாளர்கள், போக்குவரத்துக் காவல்துறை மற்றும் 108 அவசர கால ஊர்திகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் தொடக்கக் காலத்தில், ஊர்வலத்தின் போது நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



