மழைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்கியதும் வீடுகளில் சிலந்திகள் அதிகம் தோன்றுவது வழக்கமான ஒன்று. இதனால் பலர் அவற்றை விரட்ட பல்வேறு வழிகளைத் தேடுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, சில இயற்கை மணங்கள் சிலந்திகளுக்கு பிடிக்காததால், வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்தி அவை வீட்டிற்குள் வருவதை குறைக்கலாம்.
அவற்றில் முக்கியமானது இலவங்கப்பட்டை. அதன் மணம் சிலந்திகளுக்கு பிடிக்காததால், அரைத்த இலவங்கப்பட்டை தூளை கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சிலந்திகள் நுழையக்கூடிய இடங்களில் தூவலாம். மேலும், தரையைத் துடைக்கும் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இலவங்கப்பட்டை தூளை கலந்து பயன்படுத்தினாலும் அதன் மணம் நீண்ட நேரம் நிலைத்து இருக்கும்.
மிளகுக்கீரை எண்ணெயின் மணமும் சிலந்திகளை விலக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இதற்காக 10 முதல் 15 சொட்டு மிளகுக்கீரை எண்ணெயை தண்ணீரில் கலந்து, ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி ஜன்னல்கள், கதவுகள் மற்றும் வீட்டின் மூலைப்பகுதிகளில் தெளிக்கலாம்.
வெள்ளை வினிகரையும் சிலந்திகளை விரட்ட பயன்படுத்தலாம். சம அளவு தண்ணீர் மற்றும் வெள்ளை வினிகரை கலந்து, சிலந்திகள் நுழையக்கூடிய பகுதிகளில் தெளிக்கலாம். இருப்பினும், பாலிஷ் செய்யப்பட்ட அல்லது வார்னிஷ் பூசப்பட்ட மரப்பொருட்களில் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களின் மணத்தையும் சிலந்திகள் விரும்புவதில்லை. எலுமிச்சை தோலை கதவுகள், ஜன்னல்கள் போன்ற இடங்களில் தேய்ப்பதோ அல்லது எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து தெளிப்பதோ சிலந்திகள் வருவதைத் தடுக்க உதவக்கூடும்.
அதேபோல், வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். தூசி, ஒட்டடை மற்றும் சிலந்தி வலைகளை அடிக்கடி அகற்றுவதுடன், வீட்டின் மூலைகளை சுத்தம் செய்து பொருட்களை ஒழுங்காக வைத்திருந்தால், சிலந்திகள் அங்கு தங்கும் வாய்ப்பு குறையும். வீட்டின் வெளிப்பகுதியில் துளசி அல்லது புதினா போன்ற நறுமணச் செடிகளை வளர்ப்பதும் சிலந்திகள் வீட்டிற்குள் வருவதை குறைக்கும்.
Also Read: பாலில் டிடர்ஜென்ட், யூரியா, பாம் ஆயில்… அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய மோசடி!



