சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையில் கார் ஒன்றிலிருந்து இறங்கி வரும் இளம் பெண்ணின் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி, அது தமிழக வெற்றிக் கழக அமைச்சர் கீர்த்தனா என பரவலாகப் பகிரப்பட்டு வந்த நிலையில், அதற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு பெண் தனது அன்றாட வழக்கமான பணிகளை மேற்கொள்ளும் இயல்பான வீடியோவை வைத்து அரசியல் தளத்தில் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைப்பது, அதைச் செய்பவர்களின் பலவீனமான மற்றும் பிற்போக்குத்தனமான மனநிலையை வெளிப்படுத்துகிறது என அமைச்சர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு எதிராக இழிவான கருத்துகளைப் பேசிப் பழக்கப்பட்ட தலைவர்களின் ஆதரவாளர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் சாடினார்.
மேலும், அந்தக் காணொலியில் இருப்பது தான் இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், ஒருவேளை அந்தப் பெண் தானாகவே இருந்தாலும்கூட அதில் என்ன தவறு இருக்கப் போகிறது என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார். ஒரு பெண்ணின் ஆடைத் தேர்வு, தோற்றம் அல்லது அவரது தனிப்பட்ட மகிழ்ச்சி ஆகியவை பொதுவெளியில் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவதை வன்மையாக கண்டித்த அவர், அரசின் மக்கள் நலக் கொள்கைகளையோ, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையோ குறைகூற முடியாதவர்கள் பெண் வெறுப்பைத் தங்களின் மலிவான ஆயுதமாகப் பயன்படுத்தித் தனிப்பட்ட வாழ்க்கையில் வதந்திகளை கிளப்புகிறார்கள் என்று தெரிவித்தார்.
தன்னைப் போன்ற மேலோட்டமான முகத் தோற்ற ஒற்றுமையின் காரணமாக வீண் விவாதங்களில் சிக்கிப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கீர்த்தனா, அவர் மிக அழகாக இருப்பதாகவும், தன் விருப்பப்படி முழு சுதந்திரத்தோடு தனது வாழ்க்கையை தொடர்ந்து வழிநடத்த வாழ்த்துவதாகவும் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.



