சென்னை பரந்தூரில் அமைக்க முன்மொழியப்பட்ட 2-வது சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கிராம மக்களின் தொடர் எதிர்ப்புகள் காரணமாகக் கைவிட தவெக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற வரவு செலவுத் திட்டக் கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், 2022 ஆகஸ்ட் மாதம் பரந்தூர் விமான நிலையத் திட்டம் முன்மொழியப்பட்டு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) இதற்கான முதன்மைச் செயல்பாட்டு முகமையாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இத்திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி அப்பகுதி மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக வெற்றிக் கழகம் அரசு, தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.
அதேவேளையில், தவெக அரசின் இந்த முடிவிற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இத்திட்டத்தைக் கைவிடுவது சரியானதல்ல எனத் திமுக விமர்சித்துள்ளது. இதுகுறித்துச் சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னைக்கு 2-வது விமான நிலையம் மிகவும் அவசியமானது என்றும், அரசியல் காரணங்களுக்காக மட்டுமே விஜய் அரசு இத்திட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், ஏற்கனவே நாம் ஓசூர் விமான நிலையத் திட்டத்தை இழந்துவிட்டோம் என்று கூறிய தங்கம் தென்னரசு, அரசியல் காரணங்களுக்காக இத்திட்டத்தைக் கைவிடுவது மாநிலத்திற்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். பல தொழிற்சாலைகள் ஆந்திராவை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகும் என்றார்.



