சென்னை பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் அறிவித்துள்ள முடிவு, ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அற்ப அரசியல் லாபங்களுக்காக தமிழகத்தின் தொலைநோக்கு நலன்களை அடகு வைக்கக் கூடாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் விவாதிக்கவோ தங்களது கருத்துகளைப் பதிவு செய்யவோ கூட வாய்ப்பில்லாமல் செய்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.
மின்னணுப் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டின் தலைநகருக்கு உலகத் தரம் வாய்ந்த புதிய சர்வதேச விமான நிலையம் அமைவது தவிர்க்க முடியாத கட்டாயமாகும் என குறிப்பிட்ட அவர், அதை வேண்டாம் என மறுப்பது மாற்றமல்ல, மாறாக தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகம் என்று தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் அனைத்து மாற்று இடங்களையும் விரிவாகப் பரிசீலித்த பின்னரே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்ததாகவும், ஆட்சிக்கு வந்ததும் பணிகளை விரைவுபடுத்த விரிவான திட்டங்களை வகுத்து வைத்திருந்ததாகவும் அவர் விளக்கினார்.
இந்நிலையில், தற்போதுள்ள தவெக அரசு எந்தவித ஆழ்ந்த ஆலோசனைகளும் இன்றி தன்னிச்சையாக இத்திட்டத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் புதிய இடத்தைத் தேர்வு செய்ய முற்பட்டால், திட்டப் பணிகள் தொடங்கி முடிவதற்குள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளார். முதலீட்டாளர்களின் முதன்மை முகவரியாக திகழ்ந்த தமிழ்நாடு பின்தள்ளப்பட்டு, நமது அண்டை போட்டி மாநிலங்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு ஜாக்பாட்டாக அமைந்துவிடும் என்றும், 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதைத் தகர்த்து இளைஞர்களின் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு கனவுகளில் இது பேரிடியாக விழுந்துள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Read More : காதலிக்க மறுத்த இளம்பெண்; ஆபாச புகைப்படங்களை வைத்து வாலிபர் செய்த கொடூரம்!



