சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் விதி சார்ந்த அறிவிப்புகளுக்கு முறைப்படி சபாநாயகர் அனுமதி வழங்கும் முன்பாக, அவற்றை சமூக வலைதளங்களிலோ அல்லது செய்தி ஊடகங்களிலோ வெளியிடக் கூடாது என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், ஊடகங்களுக்கும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர், பேரவை விதி 55 மற்றும் 56 ஆகியவற்றின் கீழ் அளிக்கப்படும் அறிவிப்புகள் சட்டசபை செயலாளர் அல்லது பேரவை தலைவரால் பரிசீலிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்ட பின்னரே அவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார். ஆனால், சில உறுப்பினர்கள் தாங்கள் சமர்ப்பிக்கும் அறிவிப்புகளுக்கு அனுமதி கிடைப்பதற்கு முன்பாகவே, அவற்றை தங்களின் தனிப்பட்ட முகநூல், எக்ஸ் தளம், யூடியூப் சேனல்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு முன்கூட்டியே வழங்குவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சட்டப்பேரவை விதி 36 உட்பிரிவு 5 இதனை மிக தெளிவாக வரையறுத்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சபாநாயகர் அனுமதி அளித்து சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு முறைப்படி அனுப்பும் வரை, அந்த அறிவிப்பை உறுப்பினரோ அல்லது வேறு எவரோ பொதுவெளியில் வெளியிடுவது பேரவை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்றார்.
மேலும், தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் சேர்த்தே இந்த உத்தரவு பொருந்தும் என குறிப்பிட்ட சபாநாயகர், உறுப்பினர்கள் அனுமதியின்றி அளிக்கும் இத்தகைய அறிவிப்புகளை ஊடகங்களும் செய்தியாக வெளியிடவோ அல்லது பிரசுரிக்கவோ கூடாது என்றும், ஜனநாயக மாண்பை போற்றி அனைவரும் சட்டமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


