பிறப்புச் சான்றிதழ் முதல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் வரை பல்வேறு அரசு சேவைகளுக்காக அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு புதிய டிஜிட்டல் முயற்சியை மேற்கொள்ள உள்ளது. பொதுமக்கள் தங்களது கைபேசியிலேயே சுமார் 500 அரசு சேவைகளைப் பெறும் வகையில் ‘வெற்றி தமிழ்நாடு சூப்பர் செயலி’ உருவாக்கப்பட உள்ளது.
இந்த புதிய செயலி ரூ.5 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரே தளத்தின் மூலம் பல்வேறு துறைகளின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சட்டப்பேரவையில் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் ரா.குமார், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை தொடர்பான சேவைகள், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த சூப்பர் செயலி வழியாக வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் அரசு சேவைகளைப் பெறுவதற்காக பொதுமக்கள் அடிக்கடி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனுடன், பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அரசிடம் நேரடியாக தெரிவிக்கும் வகையில் ‘வெற்றி தமிழ்நாடு’ இணையதளம் ரூ.1 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ளது. அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த கருத்துகளையும் இந்த இணையதளம் மூலம் மக்கள் பதிவு செய்ய முடியும்.
செயற்கை நுண்ணறிவு துறையிலும் தமிழகத்தில் புதிய முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தயாரிப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோருக்கு இலவச AI சேவைகளை வழங்கும் திட்டம் ரூ.10 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் ‘வெற்றி தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள்’ அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க டெபிட் கார்டு தேவையில்லை! UPI மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி தெரியுமா?



