நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐக் கடந்துள்ள நிலையில், சடலங்களைப் பாதுகாக்கவும் அடையாளம் காணவும் இடம் இன்றி நேபாள அரசு கடும் அவதிப்பட்டு வருகிறது.
நேபாளம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனை பிரேதக் கிடங்குகளிலும், ஒட்டுமொத்தமாக சுமார் 350 சடலங்களை மட்டுமே வைப்பதற்கான வசதி உள்ளது. ஆனால் பலியானோர் எண்ணிக்கை 600-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், சடலங்களை வைக்க இடமின்றி மருத்துவமனைகள் திணறி வருகின்றன. இன்னும் 2,500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சடலங்களைப் பாதுகாக்க குளிரூட்டப்பட்ட தற்காலிக மையங்களை நேபாளக் காவல்துறை அமைத்து வருகிறது. ஆற்றில் இருந்து மீட்கப்படும் உடல்கள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, நெருக்கமான புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. பின்னர் ‘டேக்’ ஒட்டப்பட்ட சிறப்புப் பைகளில் அடைத்து தற்காலிக மையங்களுக்கு அனுப்புகின்றனர். காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேடி வரும்போது, இந்தப் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட பின்னரே சடலங்கள் ஒப்படைக்கப்படுகின்றன.
முகம் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் உள்ள சடலங்களில் இருந்து கைரேகைகள் மற்றும் மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. உறவினர்கள் வராத பட்சத்தில், சடலங்களை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது என்பதால், சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களின்படி குறிப்பிட்ட இடங்களில் டேக் எண்களுடன் அடக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
வெள்ளத்தில் பிற நாட்டுப் பிரஜைகளும் காணாமல் போயுள்ளதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு அனுமதிக்குமாறு சர்வதேச அளவில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் நிபுணத்துவக் குழுக்களை அனுமதிக்க நேபாள அரசு முடிவெடுத்துள்ளது.



