H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். புற்றுநோய் மற்றும் அதற்கான சிகிச்சைகள் உடலின் நோய்த்தொற்று எதிர்ப்பாற்றலைக் குறைப்பதால், புற்றுநோயாளிகளுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து மிக அதிகம்.
மரேங்கோ ஆசியா மருத்துவமனையின் (Marengo Asia Hospitals) மருத்துவ புற்றுநோயியல் பிரிவின் இயக்குநர் மற்றும் தலைவர் டாக்டர் சன்னி ஜெயின் இது குறித்து எச்சரித்துள்ளார். கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை, இம்யூனோதெரபி, ஸ்டெம்-செல் மாற்று அறுவை சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் ரத்தப் புற்றுநோயால் (லுகேமியா/லிம்போமா) பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்திருக்கும் என்பதால் அவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயாளிகளுக்கு H1N1 ஏன் அதிக ஆபத்தானது?
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, ஆரோக்கியமான ஒருவருக்கு எளிதில் குணமாகக்கூடிய ஒரு சிறிய வைரஸ் தொற்று கூட, புற்றுநோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும்.
இது தீவிரமான காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் சுவாச செயலிழப்பு போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.
குறிப்பாக நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு, அவர்களின் சுவாச மண்டலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் இந்த ஆபத்து அதிகம்.
நிமோனியா, இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று, ஆக்சிஜன் அளவு குறைதல், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை மற்றும் சில நேரங்களில் உயிரிழப்பு கூட நேரலாம்.
அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்:
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, குளிர், சோர்வு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
புற்றுநோயாளிகள், குறிப்பாக சிகிச்சை பெற்று வருபவர்கள், இவற்றை சாதாரண வைரஸ் தொற்று என அலட்சியப்படுத்தக் கூடாது.
மூச்சு விடுவதில் சிரமம், தொடர்ச்சியான காய்ச்சல், குழப்பம், அசாதாரண சோர்வு, நீர்ச்சத்து குறைபாடு அல்லது ஆக்சிஜன் குறைபாடு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவதன் மூலம், சரியான ஆன்டிவைரல் (antiviral) சிகிச்சையை மருத்துவர்கள் தீர்மானிக்க முடியும்.
தற்காத்துக் கொள்ளும் முறைகள்:
தனிமனித சுகாதாரம் என்பது முதல் கட்டப் பாதுகாப்பாகும். கதவு கைப்பிடிகள் போன்ற பொதுவான இடங்களைத் தொட்ட பிறகு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
கண்கள், மூக்கு மற்றும் வாயை தேவையின்றி தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நோய்த்தொற்று உள்ளவர்களிடமிருந்து தள்ளியிருக்க வேண்டும். வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
அதிக ஆபத்தில் உள்ளவர்கள், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
காய்ச்சல் தடுப்பூசி:
புற்றுநோயாளிகள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்வது ஒரு முக்கியமான தடுப்பு நடவடிக்கையாகும்.
எனினும், எந்த வகையான தடுப்பூசியை, எந்த நேரத்தில் போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களின் புற்றுநோய் மருத்துவரிடம் (Oncologist) அல்லது முதன்மை மருத்துவரிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் உயிருள்ள வீரியம் குறைக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு (live attenuated vaccine) பதிலாக, செயலிழக்கப்பட்ட (inactivated) அல்லது ரீகாம்பினன்ட் (recombinant) தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். நோயாளியின் வயது, உடல்நிலை மற்றும் சிகிச்சை முறை ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவக் குழுவால் இது தீர்மானிக்கப்பட வேண்டும்.
வீடுகளுக்குள் தொற்று பரவுவதைக் குறைக்க, நோயாளிகளுடன் இருக்கும் குடும்ப உறுப்பினர்களும் மற்றும் பராமரிப்பாளர்களும் பரிந்துரைக்கப்பட்ட காய்ச்சல் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.



