முன்னாள் காதலியை பழிவாங்க நினைத்த இளைஞர்.. வெளிச்சத்துக்கு வந்த வினாத்தாள் கசிவு; தேர்வையே ரத்து செய்த அதிகாரிகள்!

WhatsApp Image 2026 08 31 at 2.18.52 PM 2

காதல் முறிவால் ஏற்பட்ட கோபம், மகாராஷ்டிராவில் நடைபெற்ற அரசு பணிக்கான போட்டித் தேர்வு முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததாக கூறப்படும் சம்பவத்தில் முடிந்துள்ளது. முன்னாள் காதலி தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், தான் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அவருக்கு எதிராக தேர்வாணையத்தில் புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையான வினாத்தாள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் 22ஆம் தேதி மருந்து ஆய்வாளர் பணியிடங்களுக்கான ‘குரூப்-பி’ தகுதித் தேர்வை நடத்தியது. தேர்வு முடிவுகள் ஜூலை 22ஆம் தேதி வெளியானபோது, மொத்தம் 488 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களில் ருதுஜா என்பவரும் ஒருவர். ஆனால், அவரது முன்னாள் காதலரான கௌரவ் தேர்வில் வெற்றி பெறவில்லை.

இதையடுத்து இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற்றதால் ருதுஜா தன்னை விட்டு விலகிவிடுவார் என்ற அச்சமும் கௌரவுக்கு இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் பின்னர் பிரிந்த நிலையில், ருதுஜா தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகக் கூறி கௌரவ் தேர்வாணையத்திற்கு தகவல் அனுப்பியுள்ளார்.

ஜூலை 22ஆம் தேதி தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில், மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக அவர் குறிப்பிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டு, மும்பை போலீசார் ஜூலை 27ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. கௌரவ் தனது முன்னாள் காதலியை பழிவாங்கும் நோக்கத்தில் புகார் அளித்திருந்தாலும், அவர் தெரிவித்த வினாத்தாள் கசிவு குறித்த தகவலில் உண்மை இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

வினாத்தாள் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, அதாவது மார்ச் 20ஆம் தேதி சட்டவிரோதமாக சிலரிடம் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ருதுஜாவின் தந்தை அம்ருத், பயிற்சி நிறுவன இயக்குநர் பிரவின் பாட்டீலுக்கு ரூ.5 லட்சம் கொடுத்து வினாத்தாளைப் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேர்வாணையத்துடன் தொடர்புடைய அலுவலகத்தில் இருந்து வெளியேறிய வினாத்தாள், பலரிடம் கைமாறிய பின்னர் பயிற்சி மையம் நடத்தி வந்த நபரிடம் சென்றதாகவும், அதன் பிறகு அம்ருத்திடம் வழங்கப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

வினாத்தாள் கிடைத்த பிறகு, அதில் இடம்பெற்றிருந்த சில கேள்விகளை ருதுஜா தனது காதலரான கௌரவுடன் பகிர்ந்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் நடைபெற்ற தேர்வில் ருதுஜா வெற்றி பெற்றார். கௌரவ் தோல்வியடைந்தார். இந்தச் சூழலில்தான் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, இறுதியில் வினாத்தாள் கசிவு விவகாரத்தை அதிகாரிகளிடம் கொண்டு செல்லும் நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் மேற்கொண்ட ஆய்வில், கசிந்ததாகக் கூறப்படும் வினாத்தாளில் இடம்பெற்ற 77 கேள்விகள் உண்மையான தேர்விலும் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வின் நம்பகத்தன்மை குறித்து தீவிர சந்தேகம் எழுந்தது.

இதனிடையே, மும்பை குற்றப்பிரிவு மேற்கொண்ட விசாரணையின் முதற்கட்ட அறிக்கை தேர்வாணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. தேர்வு நடைமுறையின் ரகசியத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், மருந்து ஆய்வாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்வதாக தேர்வாணையம் அறிவித்தது.

இந்த வழக்கில் தேர்வாணைய துணைச் செயலர் அபிஜித் லெண்டவே, உதவி பிரிவு அலுவலர்கள் கோபால் மராத்தே, விஸ்வேஷ்வர் நாகேட் மற்றும் கௌடல்யா, பயிற்சி நிறுவன இயக்குநர் பிரவின் பாட்டீல், ஆசிரியர் அம்ருத் நம்தியோ பாட்டீல், கௌரவ் பாட்டீல் மற்றும் மாலேகானைச் சேர்ந்த மருந்து நிறுவன ஊழியர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசு பணியாளர் தேர்வுகள் முதல் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் வரை வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு தொடர்பான விவகாரங்கள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இங்கு முன்னாள் காதலியை பழிவாங்கும் நோக்கில் அளிக்கப்பட்டதாக கூறப்படும் புகார், இறுதியில் ஒரு முழுமையான தேர்வு முறைகேட்டை வெளிக்கொண்டு வந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

Also Read: அதிர்ச்சி!!! 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! சாக்லேட் கொடுத்து அத்துமீறிய கேப் டிரைவர் கைது..

Saranya

Next Post

2026-ல் கோரத் தாண்டவமாடும் இயற்கை..!! பூமியின் அழிவு ஆரம்பமா? நாம் கற்க வேண்டிய பாடம்..!!

Mon Aug 31 , 2026
சூறாவளிப் புயல்கள், கொடூர நிலநடுக்கங்கள், வரலாறு காணாத வெப்ப அலைகள், திடீரென உடைந்து சரியும் பனிப்பாறைகள் என 2026ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே மிக தீவிரமான இயற்கை பேரழிவுகளின் ஆண்டாக உருவெடுத்து விஞ்ஞானிகளையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, உலக வரலாற்றில் பல பெரும் பேரிடர்கள் நிகழ்ந்த ’26’ என்ற தேதி, இந்த ஆண்டும் நேபாள பனிப்பாறை சரிவு உள்ளிட்ட சம்பவங்கள் மூலம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. […]
Disasters 2026

You May Like