தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக வாகனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகளின்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுழற்சி முறையில் சுங்கக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 26 முக்கிய சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, திண்டிவனம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சென்னசமுத்திரம், கொடை ரோடு, கிருஷ்ணகிரி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி, நாதக்கரை, ஓமலூர், ராசம்பாளையம், புதூர், பாண்டியபுரம், சமயபுரம், ஸ்ரீவைகுண்டம், வீரசோழபுரம், வேலன்செட்டியூர், விஜயமங்கலம் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால் வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.20 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள், லாரி மற்றும் கார் ஓட்டுநர்கள் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
வழக்கமாக சுங்கக் கட்டண உயர்வு தொடர்பான விவரங்கள் முன்கூட்டியே செய்திக்குறிப்பாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எவ்வித அதிகாரப்பூர்வ முன் அறிவிப்பையும் வெளியிடாமல் நேரடியாக கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ஆடு, சேவல் சண்டையை கண்காணிப்பது தான் உங்க வேலையா? டிஜிபிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் சரமாரி கேள்வி..!!



