கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகள் பிரிஷ்டி முகர்ஜி கட்டக், 28, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம்பூர்ஹாட்டில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இன்று காலை சுமார் 9 மணியளவில் பிரிஷ்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. குடும்பத்தினர் அளித்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார், உடலை மீட்டு ராம்பூர்ஹாட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரிஷ்டியின் மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவரது மரணத்துக்கான காரணம் குறித்து தற்போது உறுதியான தகவல் வெளியாகவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அதற்கான தெளிவான காரணம் தெரியவரும்.
பிரிஷ்டிக்கும் அவரது கணவருக்கும் இடையே நீண்டகாலமாக குடும்பப் பிரச்சினை இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். அந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருந்த சூழலில்தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
பிரிஷ்டியின் பெயர் இதற்கு முன்பும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அரசு பணி நியமன முறைகேடு விவகாரத்தில் இடம்பெற்றிருந்தது. போல்பூர் உயர்நிலைப் பள்ளியில் குரூப்-சி எழுத்தர் பணிக்கு அவர் நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அந்தப் பணியிட நியமனங்களில் முறைகேடுகள் தொடர்பான வழக்கில், கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ரத்து செய்யப்பட்ட நியமனப் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றது. ஆனால், பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே தனிப்பட்ட காரணங்களைக் கூறி அவர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில், ராம்பூர்ஹாட்டில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மற்றொரு மரணச் சம்பவமும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும், மேற்கு வங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகருமான ஆசிஷ் பானர்ஜி, கட்சி அலுவலகத்தில் உயிரிழந்திருந்தார். அவரிடம் இருந்து கிடைத்த கடிதத்தில் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான பரபரப்பு நீடித்து வரும் நிலையில், தற்போது மம்தா பானர்ஜியின் மருமகள் உயிரிழந்திருப்பது மேற்கு வங்கத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: வெள்ளத்தில் சிக்கியும் சின்ன சேதம் கூட இல்லாமல் நின்ற 4 மாடி வீடு… உரிமையாளர் சொன்ன காரணம் இதுதான்!



