தங்களை ‘கைலாசாவின் ஆன்மிக தூதரக உறுப்பினர்கள்’ என அறிமுகப்படுத்திக் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது, கைலாசாவிற்கும் புதுச்சேரி அரசுக்கும் இடையே நல்லுறவு மற்றும் நட்புறவை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி ஏம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள நித்யானந்தாவின் ‘கைலாச தியானபீடத்தில்’ அடுத்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அவர்கள் முறைப்படி அழைப்பு விடுத்தனர். மேலும், இந்தக் கும்பாபிஷேக நிகழ்வில் நித்யானந்தா நேரில் பங்கேற்க உள்ளதாகவும், அதற்காக மத்திய அரசிடம் உரிய அனுமதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன், நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தரும் போது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் புதுச்சேரி அரசிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, கைலாசாவின் ஆன்மிக வரலாறு மற்றும் அதன் செயல்பாடுகளை விளக்கும் சிறப்புப் புத்தகத்தை முதலமைச்சருக்கு அக்குழுவினர் பரிசாக வழங்கினர். இதேபோல், புதுச்சேரி தற்காலிக சபாநாயகர் அன்பழகன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜவேலு ஆகியோரையும் கைலாசாவின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.
Read More : தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமா? இது மக்களுக்கு காது குத்தும் திட்டம்.!! இறங்கி அடித்த உதயநிதி..!!



