புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மறைந்த வெங்கடாசலத்தின் குடும்பத்தில் சொத்துத் தகராறு முற்றிய நிலையில், அவரது தம்பியைச் சொந்த அண்ணனே விரட்டிச் சென்று கத்தியால் குத்தி, சிலிண்டரை தலையில் போட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலத்தின் முதல் மனைவி மகனான ராஜபாண்டி, அதிமுக அம்மா பேரவையின் மாநில இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி சுவிதாவும் அதிமுக மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், வெங்கடாஜலத்தின் இரண்டாவது மனைவியின் மகனான ராஜராஜனுக்கும் ராஜபாண்டிக்கும் இடையே பூர்வீக சொத்துப் பங்கீடு தொடர்பாக நீண்டகாலமாக தகராறு இருந்து வந்தது.
ஓராண்டுக்கு முன்பு ராஜராஜனுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட ஓட்டு வீட்டிற்குள் அவரை செல்ல விடாமல் ராஜபாண்டி மிரட்டி வீட்டைப் பூட்டியதாகவும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை புகார் அளித்தும் உரிய தீர்வு கிடைக்காததால் ராஜராஜன் நீதிமன்றத்தை நாடியதாகவும் கூறப்படுகிறது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட வீட்டை உடனடியாக ராஜராஜனிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல்துறையினர் தலையிட்டு, ராஜபாண்டியிடமிருந்து சாவியை வாங்கி கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ராஜராஜனிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இதனையடுத்து, இன்று தனது குடும்பத்துடன் குடியேறுவதற்காக அந்த வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ராஜராஜன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு ஆவேசமாக வந்த ராஜபாண்டி, “இது என்னுடைய வீடு, இங்கு என்ன செய்கிறாய்?” எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துத் தாக்க முயன்றுள்ளார். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக்கொண்டு தெருவில் ஓடிய ராஜராஜனை விடாமல் விரட்டிச் சென்ற ராஜபாண்டி, அருகிலுள்ள ராமலிங்கம் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து ஒளிந்திருந்த ராஜராஜனை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.
அதோடு, அங்கிருந்த கேஸ் சிலிண்டரை தூக்கி அவரது தலையில் கொடூரமாகப் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் ராஜராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு வீட்டில் இருந்த மூதாட்டி அலறியடிக்கவே, ராஜபாண்டி தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடினார்.
தகவலறிந்து கொந்தளித்த ராஜராஜனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், கொலையாளியை கைது செய்யக் கோரி புதுக்கோட்டை – பட்டுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தப்பியோடிய ராஜபாண்டி புதுக்கோட்டையில் தனது வழக்கறிஞருடன் சென்று காவல்துறையிடம் சரணடைந்தார்.



