நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின்போது சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர்.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பேரழிவில் சிக்கி இதுவரை 1,282 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் மட்டும் சுமார் 600 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைத்தொடர்புச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் சரியான தகவல்களைத் திரட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் மட்டும் சுமார் 22 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர்.
நேபாள ராணுவம், ஆயுதமேந்திய காவல் படை மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் இணைந்து காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களைத் தேடும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்ட இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர். கபீர் மகர்ஜன் (45, மெக்கானிக்கல் சூப்பர்வைசர்) மற்றும் சஞ்சய் ஷா (30, ஃபோர்மேன்) ஆகிய இருவர் ‘த்ரிசூலி 3A’ நீர்மின் திட்ட சுரங்கப் பாதையிலிருந்து மீட்கப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தித் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கத்தின் உள்ளேயிருந்து மனிதக் குரல்கள் கேட்பதை உணர்ந்து, தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். இதன் பின்னரே மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருவரும் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டனர்.
சுரங்கத்திற்குள் இன்னும் கூடுதல் நபர்கள் சிக்கியிருக்கலாம் என்ற நம்பிக்கையில் மீட்புக் குழுக்கள் தொடர்ந்து தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.



