தற்கால அவசர மற்றும் இயந்திர வாழ்க்கையில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த அழுத்தத்தில் இருந்து விடுபடவும், வார இறுதி விடுமுறை நாட்களை புத்துணர்ச்சியுடன் கழிக்கவும் பலரும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு மலையேற்றம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மலையேற்ற பிரியர்களின் விருப்ப பட்டியலில் முதலிடம் பிடித்து திகழ்கிறது வரலாற்று சிறப்புமிக்க ஹுத்ரிதுர்கா மலை. ஒரே நாளில் எளிதாக சென்று திரும்பிவிட முடியும் என்பது இதன் தனித்துவமாகும்.
துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியில் அமைந்திருக்கும் இம்மலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,747 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அடிவாரத்தில் ஆதிநாராயண சுவாமி கோவிலும், மலையின் நடுப்பகுதியில் சங்கரேஸ்வரர் கோவிலும் அமைந்திருப்பது ஆன்மீக அமைதியை தருகிறது. அடிவாரத்தில் இருந்து நடைபயணம் தொடங்கினால் சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்குள் உச்சியை அடைந்துவிடலாம். உச்சியில் இருந்து பார்க்கும்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்த கிராமங்களின் அழகையும், அதிகாலையில் தவழும் மேக கூட்டங்களையும், மாலையில் கண்கொள்ளா சூரிய அஸ்தமனத்தையும் ரசித்து மகிழலாம்.
பெங்களூரில் இருந்து சுமார் 79 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நெலமங்களா சந்திப்பு, குனிகல் வழியாக மாகடி சாலையில் சொந்த வாகனங்களில் எளிதாக செல்லலாம். பேருந்து அல்லது ரயிலில் செல்வோர் குனிகல் வந்து அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் அடிவாரத்தை அடைய முடியும். வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த அடிவாரத்தில் கட்டண வாகன நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மலையில் கடைகள் எதுவும் இல்லாததால், தேவையான குடிநீர் மற்றும் சிறுதீனிகளை பயணிகளே முன்கூட்டியே எடுத்துச் செல்வது அவசியமாகும்.
அதேசமயம், மலையேற்றம் மேற்கொள்பவர்கள் சில அத்தியாவசிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். பயணத்திற்கு முன் வானிலை மற்றும் வனத்துறை அனுமதிகளை சரிபார்ப்பதுடன், முதலுதவி பெட்டி, கிரிப் கொண்ட காலணிகள், டார்ச் லைட் மற்றும் பவர் பேங்க் போன்றவற்றை கையில் வைத்திருக்க வேண்டும். குழுவாக சீரான வேகத்தில் செல்வது, இருட்டிய பின் மலையேறுவதை தவிர்ப்பது மற்றும் போதை பழக்கங்களை கைவிடுவது பாதுகாப்பானது. எல்லாவற்றிற்கும் மேலாக, பிளாஸ்டிக் கழிவுகளை மலையில் வீசி இயற்கையை பாழ்படுத்தாமல் மீண்டும் கீழே கொண்டுவந்து சேர்ப்பது ஒவ்வொரு பொறுப்புள்ள பயணியின் தலையாய கடமையாகும்.



