கேப் வெர்டே (Cape Verde) நாட்டின் ஃபோகோ (Fogo) தீவில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பியபோது இந்த நெஞ்சை உலுக்கும் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
சனிக்கிழமை இரவு சுமார் 9:00 மணியளவில் காம்பனாஸ் டி சிமா (Campanas de Cima) சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சா தாஸ் கால்டெராஸ் (Chã das Caldeiras) என்ற பகுதிக்குச் சென்ற மாணவர்கள், அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு நேரத்தில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அதல பாதாளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்தச் சுற்றுலாவை பேருந்து ஓட்டுநரே ஏற்பாடு செய்திருந்த நிலையில், விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்ததை சாவோ பிலிப் (São Filipe) நகர மேயர் நூயாஸ் சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். பேருந்து பள்ளத்தில் உருண்டதில் பலர் வெளியே தூக்கி வீசப்பட்டனர்; சிலர் இடிபாடுகளுக்கு உள்ளேயே சிக்கிக் கொண்டனர். பாறைகள் நிறைந்த கடினமான நிலப்பரப்பு என்பதால் மீட்புப் பணிகளில் பெரும் சவால் ஏற்பட்டது. விபத்தில் சில உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதால், 7 பேரின் உடல்கள் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் படுகாயமடைந்த சுமார் 19 பேர் சாவோ பிரான்சிஸ்கோ டி அசிசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, கேப் வெர்டே அதிபர் ஜோஸ் மரியா நெவ்ஸ் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இரண்டு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என உள்ளூர் நகர சபை அறிவித்துள்ளது.



