அபுதாபி செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது முதல் என்ஜினில் ஆயில் அளவு வேகமாக குறைந்ததால், விமானி அந்த என்ஜினை நிறுத்திவிட்டு விமானத்தை கொச்சிக்கு திருப்பியுள்ளார்.
கொச்சியில் இருந்து அபுதாபிக்கு IX 415 என்ற விமான எண் கொண்ட Boeing 737 விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சுமார் 50 நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் 36,000 அடி உயரத்தில் பயணித்தபோது Engine 1-ல் ஆயில் அளவு தொடர்ந்து குறைந்து வருவதை விமானி மற்றும் துணை விமானி கவனித்தனர்.
நிலைமையை மதிப்பிட்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட விமானக் குழுவினர், அபுதாபி பயணத்தைத் தொடர்வது பாதுகாப்பானதல்ல என முடிவு செய்து விமானத்தை மீண்டும் கொச்சிக்கு திருப்பினர். இதற்கான தகவலை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்ததுடன், விமானத்தின் அனைத்து முக்கிய அளவீடுகளையும் தொடர்ந்து கண்காணித்தனர்.
விமானம் கொச்சியை நோக்கி திரும்பிய சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு Engine 1-ன் ஆயில் பிரஷர் அளவீட்டில் கடுமையான மாற்றம் ஏற்பட்டது. அளவு சிவப்பு எச்சரிக்கைப் பகுதியில் சென்றதால், விமானக் குழுவினர் அவசரகால நடைமுறையின்படி அந்த என்ஜினை முழுமையாக நிறுத்தினர்.
ஒரு என்ஜின் மட்டுமே இயங்கிய நிலையில் விமானம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. மேலும், விமானம் முழு எடையுடன் இருந்த நிலையில் ஒற்றை என்ஜின் மூலம் தரையிறங்க வேண்டிய சூழல் உருவானது. அதிக கவனமும் துல்லியமான செயல்பாடும் தேவைப்படும் இந்த நடைமுறையை விமானக் குழுவினர் வெற்றிகரமாக கையாண்டனர்.
இந்த சம்பவம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் விமானங்களின் தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் புக்கெட்–டெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து விசாரணை அமைப்பு வெளியிட்டிருந்தது. அந்த சம்பவத்துக்குப் பிறகு விமானப் பணியாளர்களுக்கான போதைப்பொருள் பரிசோதனையை அதிகரிக்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டத்தை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், IX 415 விமானத்தில் ஏற்பட்ட என்ஜின் ஆயில் பிரச்சினையும் விமான நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மேற்கொள்ளும் பாதுகாப்பு ஆய்வுகளை மேலும் வலுப்படுத்த வேண்டுமா என்ற விவாதத்துக்கும் இந்த சம்பவம் வழிவகுத்துள்ளது.
இந்தியாவின் விமானப் பாதுகாப்பு கண்காணிப்பு நடைமுறைகளை அமெரிக்காவின் Federal Aviation Administration (FAA) சர்வதேச விமானப் பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்கிறது. இந்தியாவில் அடுத்த முக்கிய மதிப்பீடு நவம்பர் 2026-ல் நடைபெற உள்ள நிலையில், விமானப் பாதுகாப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் சர்வதேச அளவில் கவனிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் DGCA-வின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
Also Read: “ஒரு பைசாவைக் கூட தொடமாட்டோம்!”… சட்டப்பேரவையில் விஜய் ஆவேசம்; திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!



