BIG BREAKING | தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி இடைத்தேர்தல்..!! தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

TN Election 2026

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் வழக்குகள் ஏதுமின்றி இருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். இதேபோன்று மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் மொத்தம் 7 தொகுதிகள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டன. பொதுவாக ஒரு தொகுதி காலியானால் குறிப்பிட்ட காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதேபோல் பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்றத் தடை அமலில் உள்ளது. இதனால் எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல் தொகுதிப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், தடையை நீக்கி உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத் தடையோ அல்லது தேர்தல் வழக்குகளோ இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்டமாக அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதிகளுக்கு செப்.9ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்.16ம் தேதி கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை செப்.17ம் தேதி நடக்கிறது. வேட்புமனு செப்.19ம் தேதி திரும்பப் பெறலாம். தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 9ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

Read More : சத்தம் போட்டு பேசினால் அனைத்தும் உண்மையாகி விடுமா? திமுகவுக்கு பயந்து சபாநாயகரே..!! எம்பி கனிமொழி கடும் தாக்கு..!!

Next Post

குட் நியூஸ்..! கேஸ் சிலிண்டருக்கு இனி 45 நாட்கள் காத்திருக்க தேவையில்லை..! மத்திய அரசு தளர்வு அறிவிப்பு..!

Mon Sep 7 , 2026
மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, கிராமப்புறங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற நுகர்வோரைப் போலவே கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை புதிய சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். […]
Gas 2025

You May Like