கோடி லிங்க தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம்..! வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி..?

Sivan 2025

சைவ வழிபாட்டில் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி திதி சிவபெருமானுக்குரிய மிக உன்னதமான நாளாக போற்றப்படுகிறது. திருவண்ணாமலை உள்ளிட்ட புனித தலங்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் ஈசனை வழிபடும் நிலையில், தமிழ் மாதங்களில் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு தனித்துவமான ஆன்மீக முக்கியத்துவம் உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் மகா அன்னாபிஷேகம் இத்திருநாளில்தான் அனைத்து சிவாலயங்களிலும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. சிவபெருமான் அன்னத்தின் வடிவானவர் என்பதால், அன்னாபிஷேகத்தின் போது சார்த்தப்படும் ஒவ்வொரு அரிசிப் பருக்கையும் ஒரு சிவலிங்கமாகவே பாவிக்கப்படுகிறது. இதன் மூலம், மனிதர்களால் எளிதில் காண முடியாத ‘கோடி லிங்க தரிசனத்தை’ ஒரே நேரத்தில் தரிசித்து, பிறவிப் பிணியை நீக்கும் புண்ணியத்தை பக்தர்கள் பெற முடிகிறது.


இந்த ஆண்டிற்கான ஐப்பசி பௌர்ணமி திதியானது நவம்பர் 4-ஆம் தேதி இரவு 9:42 மணிக்குத் தொடங்கி, நவம்பர் 5-ஆம் தேதி மாலை 7:27 மணி வரை நீடிக்கிறது. இதனால் அன்னாபிஷேக பூஜையை நவம்பர் 5-ஆம் தேதியன்று மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் வழிபட உகந்த நேரங்களாக பிரம்ம முகூர்த்த வேளை, காலை 9:15 முதல் 10:15 மணி வரை, காலை 11:45 முதல் மதியம் 12:45 மணி வரை மற்றும் மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை சுப முகூர்த்தங்களாக கணிக்கப்பட்டுள்ளன.

ஆலயங்களுக்குச் சென்று தரிசிப்பதுடன் மட்டுமல்லாமல், இல்லங்களிலேயே சிவலிங்கம் அல்லது சிவபெருமான் திருவுருவப் படத்திற்கு முறைப்படி அன்னாபிஷேகம் செய்து நற்பலன்களைப் பெறலாம். வீட்டில் சிவலிங்கம் வைத்திருப்பவர்கள் முதலில் அதனைத் தூய நீரினாலும், பின்னர் பசும்பாலினாலும் அபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து வடித்து ஆறவைத்த பச்சரிசி சாதத்தைக் கொண்டு சிவலிங்கம் முழுவதும் மூடுமாறு அலங்கரித்து அன்னாபிஷேகம் செய்ய வேண்டும். சிவலிங்கம் இல்லாதவர்கள், ஈசனின் திருவுருவப் படத்திற்கு முன்பாக ஒரு தலைவாழை இலையை விரித்து, அதில் வடித்து ஆறிய பச்சரிசி அன்னத்தை வைத்து சிறிதளவு தூய நெய் சேர்த்து வழிபடலாம்.

வழிபாட்டின் போது ஐந்து நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றிவைத்து, காய்-கனிகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். தொடர்ந்து “ஓம் லிங்கேஸ்வராய நமோ நம” என்ற சிவ மந்திரத்தை 108 முறை உச்சரித்து, தூப-தீப ஆராதனைகளுடன் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பூஜை முடிந்து சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகே அன்னத்தைக் கலைக்க வேண்டும் என்பது சாஸ்திர விதியாகும். அவ்வாறு கலைக்கும் போது, ஆவுடையின் மீது இருந்த அன்னத்தை எடுத்து நெய் கலந்து குடும்பத்தினர் அனைவரும் பிரசாதமாக உட்கொள்ளலாம். ஆனால், லிங்க திருமேனியின் பாணப் பகுதியில் சாற்றப்பட்ட அன்னத்தை மனிதர்கள் உண்ணக் கூடாது; அதனை ஓடும் நீர்நிலைகளிலோ அல்லது பறவைகள், பசுக்களுக்கோ உணவாக இட வேண்டும். மேலும், இந்த ஐப்பசி பௌர்ணமி நன்னாளில் எளியோருக்கு அன்னதானம் வழங்குவது நம் முன்னோர்களின் பாவங்களையும், குடும்பத்தின் கர்ம வினைகளையும் போக்கி சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பது ஐதீகம்.

Read More : BIG BREAKING | முதல்வர் விஜய் தான் தலைவர்..!! உருவானது மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Next Post

பர்ஸ், பீரோவில் பணம் குறையாமல் இருக்கணுமா? ஒரே ஒரு ஏலக்காய் போதும்..!! சனிக்கிழமை இதை பண்ணுங்க..!!

Thu Sep 10 , 2026
வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் திகழ காக்கும் கடவுளான மகாவிஷ்ணு மற்றும் அன்னை மகாலட்சுமியின் பரிபூரண அருள் அவசியமாகும். பொதுவாகவே ஏகாதசி திதியும், பெருமாளுக்கு உகந்த புதன் மற்றும் சனிக்கிழமைகளும் பெருமாள் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில், சனிக்கிழமையும் ஏகாதசி திதியும் ஒன்றிணைந்து வரும் நவம்பர் 1-ஆம் தேதி, இல்லங்களில் பொருளாதாரப் பற்றாக்குறையைப் போக்கி அபரிமிதமான பண வரவை ஈர்க்கக்கூடிய சக்திவாய்ந்த ஏலக்காய் வழிபாடு விசேஷமாகப் பரிந்துரைக்கப்படுகிறது. […]
Perumal 2025 1

You May Like